“சத்யா” திரைப்படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் K கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கெளதம் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியது :- நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார். நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். நான் சத்யா படத்தின் படபிடிப்பு துவங்கி பத்து நாள் கழித்து தான் ஷணம் படத்தை பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச்சிறந்த நடிகர் பட்டாளத்துடன் சத்யா திரைப்படம் நன்றாக வந்துள்ளது. சத்யா என்ற “ கமல்ஹாசன் “ அவர்கள் படத்தின் டைட்டில் இது. அந்த டைட்டிலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் என்றார் சத்யராஜ்.
வருங்காலத்தில் கண்டிப்பாக லிப்லாக் காட்சிகளில் நடிப்பேன் நடிகர் சிபிராஜ் கலக்கல் பேட்டி !
சத்யா திரைப்படத்தை பற்றி நடிகர் சிபிராஜ் பேசியது :தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். சனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும் , தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி சனம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம். நான் சனம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன். இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.படத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா என்று கேட்டார்… இல்லை இன்னும் முடிவு பண்ணவில்லை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்றேன். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார். அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். நாங்கள் முதல் முறை பேசும் போது படத்தை பற்றி அதிகம் பேசவில்லை. தமிழை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தை பற்றி கதையை பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது , நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன். உங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்கு தெரியவேண்டும் அல்லவா என்று கூறினார். படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார். படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர சதீஷ் , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. யவன்னா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலைவாங்கினார் இயக்குநர் பிரதீப். ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை அவரை இப்படி தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே என்று நான் யோசிப்பேன். வரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து “ போயா “ என்று கிண்டலாக கூறிவிட்டார். இப்படி சீரியசாகவும் , ஜாலியாகவும் சென்றது சத்யாவின் படபிடிப்பு. நீங்கள் கேட்பது போல் படபிடிப்பின் போது லிப் லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன் , என்னை ரோல் மாடலாக பார்க்கிறான்… நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம். உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் “ சத்யா “ படத்தின் டைட்டிலை அவரிடம் கேட்டு முறைப்படி வாங்கி இந்த படத்துக்கு வைத்துள்ளோம். கதையில் கதாநாயகனின் பெயர் சத்யா என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம். இந்த டைட்டிலை வாங்கி தந்த ஜான்சன் சாருக்கு நன்றி என்றார் சிபிராஜ்.
நடிகர் ஆனந்த்ராஜ் பேசியது :- இந்த தலைமுறை நடிகர்கள் அனைவரும் தங்களுடைய சீனியர் நடிகர்களை மதிக்கும் பண்பை கடைபிடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெரியவர்களை மதித்தாலே அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் செல்வார்கள். சத்யா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நான் இல்லாவிட்டால் அதில் சத்யராஜ் அண்ணன் தான் நடித்திருக்க முடியும். சத்யாராஜ் அண்ணன் இன்னும் பல ஆண்டு காலம் நன்றாக வாழவேண்டும். அனைவரையும் மதிக்கும் சிபிராஜ் அடுத்தக்கட்டத்துக்கு செல்வார் என்றார் ஆனந்த்ராஜ்.
நாயகி ரம்யா நம்பீசன் பேசியது :- மிகவும் ஒழுக்கமான நேர்மையான சத்யா படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி. சத்யாவில் ஒவ்வொரு நிமிடமும் ட்விஸ்ட் டார்ன் என்று பரபரப்பாக இருக்கப்போகிறது என்றார் ரம்யா நம்பீசன்.