குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானார்

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திரம், வில்லன், காமெடி கேரக்டர்களில் நடித்த சண்முகசுந்தரம் இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.  நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், கண்ணதாசனுடன் ஹிட்லர்’ என்ற நாடகத்தில் நடித்து பிரபலமானார். இவருக்கு வயது 80. இவர் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகர் சிவாஜிகணேசன், அவரின் ’ரத்தத் திலகம்’ (1963) திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.

இதில் அவர் சீன ராணுவ மேஜராக நடித்திருந்தார். இந்தப் படத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய சண்முகசுந்தரம் தொடர்ந்து, கர்ணன், வாழையடி வாழை, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். கங்கை அமரனின் ’கரகாட்டக்காரன்’ இவருக்கு ரீ என்ட்ரி கொடுத்தது. ஏராளமான படங்களில் நடித்தார். பின்னர் வெங்கட்பிரபு, ’சென்னை 28’, ’சரோஜா’, ’கோவா’ படங்களில் நடிக்க வைத்தார்.

மேலும், ’தமிழ்ப்படம்’, ’கலகலப்பு’, ’கடவுள் இருக்கான் குமாரு’ சமீபத்தில் வெளியான ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ வரை சுமார் 250 படங்களில் நடித்துள்ளார். ராதிகாவின், அண்ணாமலை, அரசி, செல்வி உட்பட டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். மறைந்த சண்முக சுந்தரத்துக்கு மனைவி சுந்தரி, மகன் பாலாஜி, மகள்கள் கீதா, பவித்ரா ஆகியோர் உள்ளனர். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.