ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் படத்தின் வெளியீட்டு தேதியும், இதற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. அற்புதமான குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்லாமல்… கொடிய வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து தன் முத்திரையை பதித்தவர். இதயத்திற்கு நெருக்கமான கதாநாயகனும் கூட. இவர் தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும் ‘விமானம்’ எனும் திரைப்படத்தில் கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும், உணர்வுபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் வகையிலும் நடித்து, பார்வையாளர்களுக்கு விமான பயண அனுபவத்தை அளிக்கத் தயாராகி விட்டார்.

இந்த ‘விமானம்’ திரைப்படம் எதிர் வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனை ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அதனுடன் பிரத்யேக காணொளி மூலம் தெரிவித்திருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி… ”நல்லதொரு இனிமையான அனுபவக் குறிப்புடன் தொடங்குகிறது. தந்தையும், அவரது ஏழு வயது மகனான ராஜூவும் பேசத் தொடங்குகிறார்கள். அவர்களுக்குள் ஆசை என்றால் என்ன? என்பதை பரிமாறிக் கொள்வதையும் காண்கிறோம். குழந்தை விமானத்தில் உயரமாக பறக்க விரும்புகிறது. இதனால் அவர் வானத்திற்கு மேலே இருந்து உலகை பார்க்கிறார். மோசமான பொருளாதார நிலை காரணமாக அவரால் நிறைவேற்ற முடியாத கனவாக இருந்தாலும், அவனது ஆசையை தந்தை பாராட்டுகிறார்” என அந்த பிரத்யேக காணொளியில் காண்பித்திருப்பது… பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘விமானம்’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே தருணத்தில் தயாரிக்கப்பட்ட இரு மொழி திரைப்படமாகும். இதனை சிவ பிரசாத் யானலா எழுதி இயக்கியிருக்கிறார். இதில் சமுத்திரக்கனியுடன் மாஸ்டர் துருவன்,அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். மார்தன் கே. வெங்கடேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜே. கே. மூர்த்தி கவனித்திருக்கிறார். வசனத்தை பிரபாகர் எழுத, பாடலாசிரியர் சினேகன் பாடல்களை எழுதியிருக்கிறார். இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய திரைப்படங்களுக்கான தலைவர் திரு அக்ஷய் கெஜ்ரிவால் பேசுகையில், ” கே கே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து ‘விமானம்’ படத்திற்காக பணியாற்றுவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். வலுவான கதைக்களம்… திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் விமானத்தை வழங்குவது எங்கள் பாக்கியம். இப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் உணர்வுபூர்வமான பயணத்திற்கு தயாராவார்கள். ஜீ ஸ்டுடியோஸ் மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்கி வழங்குவதே எங்களது நோக்கம். இந்த ‘விமானம்’ திரைப்படம், அந்த திசையில் ஒரு நேர்நிலையான முன்னேற்றத்தின் ஒரு படியாகும்.” என்றார்.