கர்நாடக மூத்த பெண் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். வலது சாரி விமர்சகரான பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் நேற்று முன்தினம் இரவு தனது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்து பல இடங்களிலும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் கௌரியின் நினைவு அஞ்சலி கூட்டங்களும் நடத்தபட்டன. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் கௌரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், “துப்பாக்கிகள் மூலம் குரல்களை ஒடுக்க நினைப்பது, விவாதத்தில் ஜெயிப்பதற்கான மோசமான வழி. கௌரியின் மறைவால் வாடும் அனைவருக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கௌரியின் கொலை, நாட்டில் மீண்டும் கருத்துச் சுதந்திரம் குறித்த மிகப்பெரிய கேள்விக்குறியை உருவாக்கி உள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.