சண்டை பயிற்சி இயக்குநர் அன்பறிவ் தொடங்கவிருக்கும் ஆக்சன் அகாடமி

கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ். அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘கே ஜி எஃப் ’என்ற படத்தில் இவர்களது உழைப்பை பாராட்டதவர்களேயில்லை. இந்த படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கும் இவர்களை அண்மையில் சந்தித்து உரையாடினோம்.
கே ஜி எஃப் வெற்றியில் உங்களின் பங்களிப்பு குறித்து…?
முதலில் அனைவருக்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் அடைய எங்களின் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.
கே ஜி எஃப் படத்தின் கதையை இயக்குநர் எங்களிடம் விவரித்த போது, வித்தியாசமான கதை களம் என்ற ஒரு விசயம் எங்களை கவர்ந்தது. அதன் பிறகு தயாரிப்பாளர், ஹீரோ யஷ் சார், இயக்குநர் பிரசாந்த் நீல், கேமராமேன் புவன் என அனைவரும் அளித்த ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது. இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக கிட்டத்தட்ட முப்பத்தைந்து நாள் முதல் நாற்பது நாள் வரை படபிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் உற்சாகம் அளித்துக் கொண்டேயிருந்தனர்.
திரைக்கதையில் ஆக்சன் காட்சிகள் வரும் போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் எங்களின் பொறுப்பு மேலும் கூடியது. அதற்கேற்ற வகையில் நன்றாக திட்டமிட்டு, பணியாற்றினோம். ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கும் போது முதலில் நடிகர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டோம். பிறகு கேமரா கோணங்களையும், அதற்கு தேவையான விசயங்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றினோம். அதனால் தான் எங்களால் திட்டமிட்ட நாள்களுக்குள் அதாவது முப்பத்தைந்து நாள்களுக்குள் ஆக்சன் காட்சிகளை படமாக்க முடிந்தது.
இந்த கதை பீரியட் ஃபிலிம் என்பதால் ஆக்சன் காட்சிகளுக்காக ஏதேனும் ரெஃபரென்ஸ் எடுத்தீர்களா?
இல்லை. முழுக்க முழுக்க எங்களுடைய இமேஜினேசன் தான். கதை நிகழும் காலகட்டத்தையொட்டிய பல படங்களின் ஆக்சன் காட்சிகள் Rawவாகத்தான் இருந்தது. அதனை தற்போது காட்சிப்படுத்த இயலாது. அதனால் இயக்குநர் கொடுத்த சுதந்திரத்தையும், நாங்கள் இருவரும் எங்களுக்குள் விவாதித்தும், திரைக்கதையின் தேவையை மனதில் வைத்துத் தான் ஆக்சன் காட்சிகளை உருவாக்கினோம். அதே போல் ஆக்சன் காட்சிகள் Mass ஆக இருக்கவேண்டும் என்று இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் தென்னிந்திய ரசிகர்களின் விருப்பதையும் மனதில் வைத்து தான் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்தோம்.
பொதுவாக ஆக்சன் காட்சிகளில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்குமே.. இந்த படத்தில் எப்படி?
இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் குறைவு. கேமராமேனின் அயராத உழைப்பால் தான் இதனை சாத்தியப்படுத்த முடிந்தது. இந்த விசயத்தில் ஹீரோ யஷ்ஷின் ஈடுபாடு அபாரம். தான் ஒரு ஹீரோ என்பதையே மறந்து, எங்களிடம் ஆக்சன் காட்சியில் எப்படி இருக்கவேண்டும்? என்ன செய்யவேண்டும்? என்பதை கேட்டு கேட்டு நடிப்பார். 90 சதவீதத்திற்கும் மேல் அவரே தான் ஆக்சன் காட்சிகளில் நடித்தார்.
இந்த படத்தில் சவாலாக அமைந்த ஆக்சன் சீன்..?
சுரங்கத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் . முதலில் இவர்கள் அந்த இடத்தைப் பற்றிய பயத்தை போக்கினோம். அத்துடன் அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த விசயத்தில் முழு அக்கறை எடுத்துக் கொண்டோம். இதற்கும் தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்லவேண்டும். அதே போல் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட ஆக்சன் சீனில் போதிய வெளிச்சம் இல்லை என்றாலும் ஒளிப்பதிவாளர் மிகவும் சிரமத்திற்கு இடையே குறைவாக லைட்டிங் செய்து அதனை பிரமிப்பாக திரையில் காண்பித்தார்.
அடுத்து என்ன படங்களில் பணியாற்றுகிறீர்கள்?
கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்றுகிறேன். மாநகரம் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் பணியாற்றுகிறேன். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திலும் வேலை செய்யவிருக்கிறேன்.
தொடர்ந்து சண்டை பயிற்சி இயக்குநர்களாகவே இருக்கவிருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா?
சென்னையில் ஆக்சன் அகாடமி ஒன்றை தொடங்கவிருக்கிறோம். அதாவது ஆக்சனுக்கான ஸ்டூடியோ அது. இங்கு வந்து ஆக்சனுக்காக உருவாக்கிய சண்டை காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம். இதன் மூலம் படபிடிப்பின் போது ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்டு சண்டை காட்சிகளை அமைப்பதால், அதனை புதுமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.
இங்கு ஒத்திகை மட்டுமில்லாமல் ஆக்சன் காட்சியில் எப்படி நடிக்கலாம். அதற்கான தொழில்நுட்பத்தையும் கற்பிக்கவிருக்கிறோம். அத்துடன் பாதுகாப்பாக சண்டை காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்கவிருக்கிறோம். சண்டை கலைஞர்கள், சண்டை பயிற்சி இயக்குநர்கள், நடிகர்கள், ஆக்சன் காட்சியில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என பலருக்கும் இந்த அகாடமி பயனுள்ளதாக இருக்கும். workshop நடத்தவிருக்கிறோம். ஒரு துறையில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு கலைஞர்களை அழைத்து வந்து இங்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறோம். உதாரணத்திற்கு ஸ்கேட்டிங் ஃபைட், சைக்கிளிங் ஃபைட். இந்தியாவைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா போன்ற நாடுகளில் எல்லாம் இது போன்ற ஆக்சன் அகாடமிகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இதனை தொடங்கவேண்டும் என்று எண்ணி, 2019 ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்குகிறோம்.
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள் உதவியது ஒரு காலம், இசை உதவியது ஒரு காலம். படத் தொகுப்பு, ஒளிப்பதிவு உதவியது ஒரு காலம். தற்போது ஒரு படத்தின் வெற்றிக்கு சண்டை பயிற்சி இயக்குநர்களும் உதவுகிறார்கள் என்பது கே ஜி எஃப்பின் வெற்றி மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் கடுமையான உழைத்த அன்பறிவ் போன்றவர்களின் புதுமையான சிந்தனைக்கு திரையுலகமும், ரசிகர்களும் கைகொடுத்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.