அபுதாபியில் இந்து கோயிலுக்கு நிலம் ஒதுக்கீடு செய்த அபுதாபி இளவரசருக்கு பிரதமர் மோடி நன்றி

இந்தியாவின் 68-வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதையொட்டி, மூன்று நாள் அரசுமுறை பயணமாக அவர் நேற்று புதுடெல்லி வந்தடைந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டித்தழுவி வரவேற்றார். டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்றுகாலை அபுதாபி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு மரியாதையை ஏற்றுகொண்ட அவர் டெல்லி ராஜ்கட் பகுதியில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்துக்கு சென்று மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தார். அவருடைய மனைவியான அபுதாபி இளவரசியும் உடன் வந்திருந்தார். அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் மகாத்மா காந்தியைப் பற்றிய தனது உயர்வான கருத்தை பதிவு செய்து கையொப்பமிட்ட முஹம்மது பின் சயீத் அல் நயானுக்கு காந்தியின் பொன்மொழிகள் கொண்ட பதாகை நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர், டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு சென்ற அவர் அங்கு இந்தியா-அபுதாபி இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர், டெல்லியில் உள்ள பிரசித்திபெற்ற ஐதராபாத் இல்லத்தில் இருநாட்டு அரசுகளை சேர்ந்த உயரதிகாரிகள் மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்தியா – ஐக்கிய அரபு அமீரக நாடுகள் இடையே 13 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இருநாட்டு அதிகாரிகளும் பிரதமர் மோடி மற்றும் அபுதாபி இளவரசர் முன்னிலையில் ஒப்பந்தங்களை பரிமாறி கொண்டனர். அப்போது இன்றைய சந்திப்பு தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் உரையாற்றினர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, நமது நெருங்கிய நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிக முக்கியமான பிராந்தியமாகும். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான நெருங்கிய பந்தம் நமது நாடுகளுக்கு மட்டுமின்றி அண்டைநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது நட்புறவில் பாதுகாப்பு மற்றும் ராணுவ கூட்டுறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பரிமாணமாக விளங்குகிறது. இந்த களங்களில் நமது கூட்டுறவை விரிவுப்படுத்த தற்போது தீர்மானித்துள்ளோம். இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலீடு செய்ய முன்வந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம்.  இந்தியாவின் வளர்ச்சியில் அபுதாபியை முக்கிய பங்குதாரராக கருதுகிறோம். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நமது ஒத்துழைப்பை  சமூகத்தை பாதுகாக்க மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம். அபுதாபியில் வாழும் இந்து மக்களின் வழிபாட்டுக்கென கோயிலுக்கு அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்த அபுதாபி இளவரசருக்கு இன்றைய சந்திப்பின்போது நான் நன்றி தெரிவித்து கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார்.