“ஆண் தேவதை படத்தால் பல அப்பாக்கள் திருந்துவார்கள்” ; சுட்டிப்பெண் மோனிகா

இயக்குனர் தாமிரா டைரக்சனில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. ரம்யா பாண்டியன், சுஜா வாருணி, ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பெராடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா.

விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் அக்-12ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்த தங்களது அனுபவங்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்..

நாயகி ரம்யா பாண்டியன் பேசும்போது, “ஜோக்கர் படத்தில் இருந்து அப்படியே முற்றிலும் மாறான ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். ஜோக்கரை பார்த்துவிட்டு சமுத்திரக்கனி சார் தான் இந்தப்படத்தில் நடிக்க அழைத்தார். ஜோக்கர் படத்திற்குப்பின் எனது படமாக இந்தப்படம் வந்தால் நன்றாக இருக்கும் நினைத்தே நானும் ஒப்புக்கொண்டேன்.. படப்பிடிப்பில் சமுத்திரக்கனி சாருடன் நடிக்கிறோம் என்கிற பயமெல்லாம் எனக்கு ஏற்படவேயில்லை.. மேலும் தாமிரா, விஜய் மில்டன், சமுத்திரக்கனி என மூன்று பேருமே டைரக்டர்கள் என்பதால், அவர்களிடம் பாராட்டு வாங்கி நடித்தது மறக்க முடியாதது. ஆண் தேவதை டைட்டில் காரணமாக சமுத்திரக்கனி சாருக்கான படமாக தெரிந்தாலும், படம் முழுதும் அவருக்கு சமமான காட்சிகளில் நடித்துள்ளேன். அதனால் ஆண் தேவதைக்குள் உள்ள பெண் தேவதை என்றுகூட என்னை சொல்லலாம். ஜோக்கர் படத்தில் மல்லிகா தான் வெளியே தெரிஞ்சாங்க.. ஆனா ஆண் தேவதையில ரம்யா பாண்டியனும் வெளியே தெரிவாங்க” என்கிறார் நம்பிக்கையுடன்.

நடிகை சுஜா வாருணி பேசும்போது, “தாமிரா சார் போனில் இந்த கதையை சொன்னவுடனேயே இதில் நடிக்கவேண்டும் என எனக்கு தோன்றியது. அவரோட ரெட்டசுழி படமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதில் அஞ்சலி கேரக்டரை பார்த்தபோது, ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வரமாட்டேங்குது என நினைப்பேன். அந்த ஏக்கம் இதில் பூர்த்தியாகி உள்ளது. இதில் திருமணமாகி ஐடி நிறுவனத்தில் வேலைக்குப்போகும் பெண்ணாக வருகிறேன். இன்றைய சமூகத்தில் எப்படி ஸ்டைலிஷா வாழலாம் என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடிச்சிருக்கேன். என்னை திட்டாம படம் பாருங்க” என முன்கூட்டியே மன்னிப்பு கோரிக்கை விடுக்கிறார்.

நடிகர் இளவரசு பேசும்போது, “பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய எழுத்தாளரான தாமிராவிடம் ஒரு வாச்கராகத்தான் அறிமுகம் ஆனேன். இலக்கியங்காளின் பிறப்பிடமாக திகழும் தாமிரபரணி கரையில் பிறந்த தமிரா சிறந்த இலக்கியவாதியாக திகழ்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவருடைய ரெட்டச்சுழி படத்திலும் நடித்திருந்தேன்.. இந்த ஆண் தேவதையில் என்னுடையது வழக்கம்போல காமெடி கதாபாத்திரம் என்றாலும் அதிலும் ஒரு மெசேஜ் இருக்கும்.” என்கிறார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “இந்தப்படத்தில் எனக்கு ஒரே ஒருநாள் தான் ஷூட்டிங் இருந்தது. ஒரே நாளில் அதிகமான காஸ்ட்யூம் மாற்றி நடித்தது நானாகத்தான் இருக்கும். ஆணாதிக்கத்துடன் இருக்கிற ஒருத்தன் அப்படியே உல்டாவாக வீட்டோடு மாப்பிளையாக மாறிப்போகின்ற ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறேன். கொஞ்ச காட்சிகள் தான் என்றாலும் படத்தில் நான் பேசுகிற வசனங்கள் பஞ்ச் வசனங்களாக இருக்கும்.

முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் அபிஷேக் பேசும்போது, “இந்தப்பட வாய்ப்பு எனக்கு அதிர்ஷ்டத்தால் கிடைத்தது. அதேசமயம் முறையாக ஆடிஷனில் கலந்துகொண்டு அதன்மூலம் தான் தேர்வானேன். சமுத்திரக்கனி சாருடன் சேர்ந்து பணியாற்ற நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தேன். அது நிறைவேறி விட்டது. இதுவரை அடிதடி முரட்டு வில்லனாக வந்த நான் இந்தப்படத்தில் ஐடி நிறுவனத்தின் ஓனராக ரொம்பவே ஸ்டைலிஷான கேரக்டரில் நடித்துள்ளேன்” என்றார்.

படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் மோனிகா, கவின் பூபதி இருவரை பற்றியும் படக்குழுவினர் ஒருவர் விடாமல் மாற்றி மாற்றி புகழ்கின்றனர். ஒரு காட்சியில் அழுதபடி நடிக்கவேண்டும் என்றால் கிளிசரின் போடாமலே, தனியாக அமர்ந்து அதற்கான மூடை உருவாக்கி நடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மோனிகா. அதுமட்டுமல்ல டப்பிங் பேசும்போதும் அதே உணர்வை மீண்டும் அச்சு பிசகாமல் பிரதிபலித்துள்ளாராம்.

படம் பற்றி சுட்டிப்பெண் மோனிகா கூறும்போது, “நிறைய அப்பாக்கள் ஆண் தேவதை தான். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்லது எது கெட்டது எது என சொல்லிக்கொடுத்து வளர்க்கணும். இந்தப்படம் பார்க்கும்போது பல அப்பாக்கள் தங்களது தவறுகளை நிச்சயம் திருத்திக்கொள்வார்கள்” என்கிறார் மழலைத்தனம் மாறாத முதிர்ச்சியோடு.

மாஸ்டர் கவின்பூபதியும் அப்படித்தான்… குழந்தைத்தனம் மாறாத ஆனால் பக்குவப்பட்ட அவனது பேச்சும் நடிப்பும் படக்குழுவினரை ரொம்பவே ஆச்சர்யப்படுத்தியதாம். மேலே இருந்து கீழே விழும் ஒரு காட்சியில் தைரியமாக நடித்து அசத்தியுள்ளான் கவின் பூபதி. குழந்தை நட்சத்திரங்களிலேயே இவன் கொஞ்சம் ப்ரெஷ்ஷா தெரிவான் என்கிறார்கள்.

படத்தின் இயக்குனர் தாமிரா படம் குறித்து பேசும்போது, “ஏதோ ஒருவிதத்தில் நாம் நம்மையோ நம்மை சுற்றி இருப்பவர்களையோ ஏமாற்றி ஒரு வாழ்க்கை வாழவேண்டி இருக்கிறது. என் மனைவி ஒருமுறை என்னிடம் பேச்சு வாக்கில் நாம் ஏன் இந்த பெருநகரத்தில் வாழ்கிறோம், நாம் வாழ்வதற்காக சம்பாதிக்கிறோமா இல்லை சம்பாதிப்பதற்காக வாழ்கிறோமா என்கிற கேள்வியை எழுப்பினார். நெருக்கடியான தருணத்தில் அவர் கேட்ட அந்த கேள்வி ரொம்பவே முக்கியமாக பட்டது. அந்த சமயத்தில் தான் ‘பர்ஷ்யூட் ஆப் ஹேப்பிநெஸ்’ என்கிற படம் பார்த்தேன். அதன் தூண்டுதலிலும் இந்த பெருநகர வாழ்க்கையின் பாதிப்பிலும் தான் இந்த ஆண் தேவதை படம் உருவானது.

பொதுவாக இங்கே பெண்களைத்தான் தேவதையாக சொல்கிறோம். தேவதை என்பது உயர்ந்த குணம்.. உயர்ந்த பண்பு.. அப்படி உயர்ந்த குணம் உள்ள ஆணும் ஒரு தேவதையாக இருக்கலாம் என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார்.

வரும் அக்-12ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.