இலவச எரிவாயு இணைப்புகள் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் அந்த திட்டத்தை தொடர்ந்து பெற இனி ஆதார் எண்ணை வழங்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமரின் உஜ்வாலா யோஜானா என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 5 கோடி பெண்களுக்கு மூன்றே ஆண்டுகளில் அடுப்புடன் கூடிய இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்ற சான்றிதழுடன் யார் வேண்டுமானாலும் இந்த இணைப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரதமரின் உஜ்வாலா யோஜானா திட்டத்தின்கீழ் இலவசமாக எரிவாயு இணைப்புகளை பெற இனி ஆதார் அட்டை அவசியம் தேவை என பெட்ரோலியத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை பெறுவதற்காக பதிவு செய்துள்ள விண்ணப்ப வரிசை எண் ஆகியவற்றை சமர்ப்பித்து இனி இந்த பலனை அடையலாம் என பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரரின் முகவரி சான்றாக புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், விவசாய வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றின் நகலையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் இலவச இணைப்புகளை பெற வரும் மே மாதம் 31-ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.