கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவி தொகையில் முறைகேடுகள் நடைபெற்றதாக இந்திய மாணவர்சங்கத்தினர் குற்றம்சாட்டி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை தனியார் பள்ளியில் பணியாற்றும் செந்தில் என்ற ஆசிரியர் சாதி பெயரை சொல்லியும், அவதூறான, அருவருப்பான வார்த்தைகளால் திட்டிவருவதாகவும், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அமர்நாத் தலைமையில் அந்த அமைப்பினர் நிர்வாகிகள் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தினை முற்றுக்கையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர்.இதனால் இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.