சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் போலி டாக்டர்கள் மருத்துவம் பார்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தாரமங்கலம் அருகே பாரக்கல்லூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரானாஜி கெய்க்வாட் என்ற போலி டாக்டரை தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.இந்த நிலையில் ஓமலூர் அருகே காருவள்ளி சின்ன திருப்பதி பகுதியில் உள்ள மருந்து கடையில் நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அதிகாரி சத்யாவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மருந்து ஆய்வாளர் சக்திவேல், சித்த மருத்துவர் ரவிக்குமார் ஆகியோரை கொண்ட மருத்துவக்குழுவினர் அந்த மருந்து கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு மருந்து கடை நடத்தி வரும் ராமகிருஷ்ணன் (வயது 41) என்பவர் அலோபதி மருத்துவத்திற்கு படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதற்கான உபகரணங்களும் அந்த மருந்து கடையில் இருந்தன.
ராமகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி சத்யா தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருந்து கடை உரிமையாளர் ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.