வின்சென்ட் அசோகன் பிறந்த நாள் அன்று அவரது மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அப்போது அவரது மகன் ஒரு பரிசு பொருள் கொடுக்கும் போது மின்னல் தாக்கி வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் இறந்து விடுகிறார்கள். அதுபோல், போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேனுக்கு பொது இடத்தில் ஒரு எறும்பு கடித்ததுபோல் உணர்கிறார்.
அதன்பின் நடக்கும் ஒரு மீட்டிங்கில் ஆடுகளம் நரேன் இறந்து விடுகிறார். இவர் இறப்பில் மர்மம் இருக்கிறது என்று போலீஸ் நம்புகிறது. இது ஒருபுறம் இருக்க, எந்த கேஸ் கொடுத்தாலும் தன்னுடைய திறமையால் விரைவில் துப்பறிந்து விசாரிக்கிறார் தனியார் துப்பறிவாளர் விஷால். ஆனால், இவரது திறமைக்கு ஏற்றார்போல் ஒரு கேஸும் அமையாமல் இருக்கிறது. இந்நிலையில், சிறுவன் ஒருவன் என் நாய் குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டு விட்டார்கள் என்று கூறுகிறான்.
இதை விசாரிக்க ஆரம்பிக்கும் விஷாலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதாவது, வின்சென்ட் அசோகன், போலீஸ் அதிகாரி சம்மந்தப்பட்ட தகவல்கள் கிடைக்கிறது. இந்த சம்பவங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்? அதன் பின்னணி என்ன? அதை எப்படி விஷால் துப்பறிந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.