புதிய அரசியல் கட்சியுடன் களமிறங்கும் கமல்

தற்போதுள்ள அரசியல் சூழலில் நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் அரசியலில் குதிக்க போவதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் அண்மையில் கூறியிருப்பதாவது,”எனக்கும் அரசியல் பற்றிய சிந்தனை உள்ளது. ஆனால் எந்த கட்சி கொள்கையுடனும் எனது சிந்தனைகள் ஒத்துப்போகாது. சமீபத்தில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தேன். உடனே நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வந்தன. எனக்கு எந்த கட்சியுடனும் சேரும் எண்ணம் இல்லை. அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சி தான் தொடங்குவேன்.

ஆனால் இது நானாக எடுக்கும் முடிவாக இருக்காது, கட்டாயத்தின் பேரில் தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டது. இதில் மாற்றம் வரவேண்டும் என்றும், ஒருவேளை நான் அரசியலில் வெற்றி பெற்று சொன்னதை செய்யவில்லை என்றால், உடனே என்னை அந்த பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும். ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, “சரியான நேரத்தில் மாற்றம் ஆரம்பிக்கும், அதற்கான பணிகள் ஆரம்பமாகிவிட்டன. என்னை நீக்கிவிடலாம் என்று சிலர் கருதுகின்றனர். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ஒன்று நான் போவேன், இல்லை அரசியலில் ஊழல் வெளியே போகும். இரண்டும் சேர்ந்து இருக்காது”என்று தெளிவாக கூறியுள்ளார்.