கோவில்பட்டி அருகே கனமழை காரணமாக கண்மாய் உடைப்பு – பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

கோவில்பட்டி அருகே உள்ளது பிச்சைதலைவன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் தான், இவர்களுக்கு வாழ்வாதரமாக விளக்கியது அங்குள்ள நீராவி நாயக்கர் குளம் கண்மாய் உள்ளது. இந்த கிராம நீரைக் கொண்டு அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வந்தனர். இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கண்மாயின் கரையை பலப்படுத்தக் கோரியும் மதகுகளை சரி செய்யக் கேரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு கொடுத்துள்ளனர்.

இவர்களது கோரிக்கையை முறையாக கண்டு கொள்ள அதிகாரிகளே அரசு ஊழியர்களோ முன்வர வில்லை. இதனிடையே நேற்றிரவு கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் சுமார் 2 மணி நேரமாக கன மழை பெய்தது. இந்த மழைக்கு பிச்சைதலைவன்பட்டி கிராமத்தில் உள்ள நீராவி நாயக்கர் குளம் கண்மாய் முழுவதும் நிரம்பியது மட்டுமின்றி, கண்மாயின் ஒருபகுதி கரை முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. கண்மாயில் பெருகி இருந்த தண்ணீர் அருகில் உள்ள விளை நிலங்களை பாழ்படுத்தி ஓடையை சென்றடைந்தது.

இதனால் விவசாயத்திற்கு நீரை தேக்க முடியாத சூழ்நிலைக்கு இந்த கிராமத்து மக்கள் உள்ளனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு இருந்த மானவாரி பயிர்களும் சேதமடைந்துள்ள. இந்த கண்மாய் உடைப்பு தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஓரு அதிகாரியும் வரவில்லை, இதனால் கிராம மக்களே ஜே.சி.பி. எந்திரத்தை வைத்து கரையை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசு உடனடியாக போர்கால நடவடிக்கை எடுத்து இந்த கண்மாயை சரி செய்து தர வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.