வகுப்பறையை கவித்துவமாய் மாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் நல்லாசிரியர் மட்டுமல்ல மாணவர்களின் கனவு ஆசிரியர்

NEE Short Film

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், உங்கள் வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவருக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி பொங்கக்கூடிய நிகழ்வுகளோ அல்லது சோகம் நிறைந்த கதையோ நிச்சயமாக இருக்கும். அவற்றை அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் கேட்க ஆரம்பியுங்கள். இதுவே கற்பித்தலின் முதல்படி. வகுப்பறையில் கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியரைவிட, கற்றலைத் தூண்டுகின்ற ஆசிரியரைவிட, ஒரு மாணவனின் சுயசிந்தனையை தட்டி எழுப்புகின்ற, தூண்டுகின்ற ஆசிரியர்களைத் தான் இன்றைய உலகம் எதிர்பார்க்கிறது.

ஆகவே கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளையும் தாண்டி, சுய சிந்தனையை வளர்த்தெடுக்கும் விதமாக உங்கள் கற்பித்தல் முறையை அமைத்துக் கொள்ளுதல் கற்பித்தலின் இரண்டாம் படியாகும். நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறையில் ஒரு குழந்தையால் கற்றுக்கொள்ள இயலவில்லை எனில், அது கற்றுக் கொள்ளும் வகையில் உங்கள் கற்றல் முறைகளை மாற்றுங்கள். இது கற்பித்தலின் மூன்றாம் படியாகும்.

இரும்பு குறிர்ந்து போன பிறகு, அதனை எவ்வளவுதான் வலுவாக அடித்தாலும், அதலிருந்து புதியதாக எப்பொருளையும் உருவாக்க இயலாது. நெருப்பில் உருகி, இளகும் நிலையில் உள்ள இரும்பைத்தான் நாம் நினைத்தபடி மாற்ற முடியும்.

அதுபோல மாணவப் பருவத்தில், ஆசிரியர்கள், மாணவர்களை சிறந்த மாணக்கர்களாக உருவாக்கி, வருங்காலத்தில் பல டாக்டர் இராதாகிருஷ்ணன் போலவோ, டாக்டர் அப்துல்கலாம் போலவோ சிறந்த குடிமகன்களாக உருவாக்க வேண்டும். இதுபோன்று வாய்ப்பு ஒருமுறை கை நழுவி போய்விட்டால் பிறகு அவ்வாய்ப்பு நமக்கு கிடைக்காது.

ஆசிரியப் பெருமக்களாகிய நீங்களும், உங்கள் சுக துக்கங்களை மனதுள் அடக்கி, புன்னகை பூக்கும் முகத்தோடு, ஒவ்வொரு நாளும் மாணவர்களை எதிர்கொள்ளுங்கள். உங்கள் முக மலர்ச்சியே மாணவர்களுக்கு முழு வளர்ச்சியை கொடுக்கும். நீங்கள் அவர்களின் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் மட்டும் போதும், நீங்கள் நினைத்த கல்வி மற்றும் நடத்தை மாற்றத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும்.

வகுப்பறையை கவித்துவமாய் மாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் நல்லாசிரியர் மட்டுமல்ல மாணவர்களின் ‚கனவு ஆசிரியர்‛ ஆகவும் மாறுவார் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். இன்றைய ஆசிரியர் தின விழாவில் பெருமைக்குரிய டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருது தருவதும் – பெறுவதும் ஒருவரை மேன்மேலும் ஊக்கப்படுத்துவதற்காகவே. விருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்பான பணியை அனைத்து ஆசிரியர்களும் பின்பற்றி மாணவச் செல்வங்களைச் சிறப்படையச் செய்து வருங்காலங்களில் விருது பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.