கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டவர்மங்கலம் பஞ்சாயத்தில் உள்ள அன்னை தெரசாநகர். தாசில்தார்நகர், பாலாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருவதாகவும்,இதனால் சுகாதார கேடு உருவாக்கப்பட்டு பன்றி காய்ச்சல், டெங்கு போன்ற கொடிய நோய்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும், பன்றிகள் தொல்லைகளை கட்டுப்படுத்த கோரி பலமுறை ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா உதவி செயலாளர் பாபு தலைமையில், அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் பரமராஜ், நிர்வாகிகள் சரோஜா, ராமகிருஷ்ணன், துரைப்பாண்டி, காளி, நகர குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.