மனிதன் செவ்வாய் கிரகத்தில் வசிக்கும் வகையில், 2020ஆம் ஆண்டில், செவ்வாய் கிரகத்தில் இயற்கையான முறையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இருக்கும் கிரகத்தைக் காப்பாற்ற வழியில்லை… அதற்குள்ளாகப் பூமிக்கு மாற்றாக மனிதன் வாழக்கூடிய கிரகங்கள் பற்றிய ஆய்வு நடந்துகொண்டே இருக்கிறது. இதற்குச் செவ்வாய் கிரகம் சரியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
எனவே, செவ்வாய் கிரகம் பற்றிப் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கே உயிரிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் போதிய அளவிற்கு இல்லை. அங்கு இயற்கையான முறையில் ஆக்சிஜனை உருவாக்குவதன் மூலம் மனிதனை அங்குக் குடியேற்றலாம் என்று அமெரிக்காவின் நாசா கருதுகிறது. இதற்காக, செயற்கை முறையில் ஆக்சிஜனை உருவாக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர் நாசா விஞ்ஞானிகள். 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்குப் புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது.
இந்த விண்கலம் மூலம் ஆல்கா எனப்படும் பாசி இனங்கள் மற்றும் பாக்டீரியாவை கொண்டு செல்லப்போகிறார்கள். அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நாசாவின் தலைமை நிர்வாகி ராபர்ட் லைட்புட் இதைத் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி செய்வது வெற்றிகரமாக நடந்துவிட்டால், பூமியில் உள்ளது போலக் காந்த பாதுகாப்பு திரையைச் செயற்கை முறையில் செவ்வாயில் உருவாக்கவும், அணு மின் உலைகள் அமைக்கவும் நாசா திட்டமிட்டுள்ளதாம்.