தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமித்ஷா நாளை (ஆகஸ்ட் 21) காலை சென்னை வருவதாக இருந்தது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24-ம் தேதி கோவையில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். இந்நிலையில் அவரது தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில பாரத தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகையையொட்டி சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. நேற்றைய தினம் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் கூட்டமும், அதை தொடர்ந்து பல்வேறு முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதின் காரணமாக, 95 நாட்கள் நாடுமுழுவதும் மேற்கொண்ட சுற்று பயணத்தின் பகுதியாக தமிழகம் வரவிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
உற்சாகமாக அகில பாரத தலைவரின் வருகையை ஒட்டி பல்வேறு விதமான சிறப்பான ஏற்பாடுகளை செய்து ஆவலுடன் காத்திருந்த தொண்டர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அடுத்த முறை தலைவர் வரும்பொழுது இதைவிட எழுச்சியோடு நமது வரவேற்பும், செயல்பாடும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் திரு. அமித் ஷா அவர்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து ஒத்துழைப்பை நல்கிய ஊடகங்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் அவரது வருகை பற்றிய தேதி குறித்து அதிகாரபூர்மாக அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.