நீட் தேர்வு விவகாரத்தால் இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு இதுவரை நடத்தப்படவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிடுவோம் என்று கூறிக்கொண்டு அமைச்சர்கள் டெல்லி பறந்தனர். ஆனால், இந்தவாரம் அறிவிப்பு வரும், அடுத்த வாரம் அறிவிப்பு வரும் என்று மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம். கடைசியில் உச்ச நீதிமன்றமும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால், விரைவில் கவுன்சலிங் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழக அரசு பல்வேறு நிலைகளில் சட்டப் போராட்டமும், மத்திய அரசுக்கு அழுத்தமும் தந்தது. நீட் தேர்வு ரத்து குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் தெரிவித்த கோரிக்கைகள், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் முன்னிலையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அதன்பிறகு ஓரிரு நாட்களில் மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்” என்றார்.