சென்னை உயர்நீதிமன்றம் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதய சந்திரனை இடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் இடமாற்றம் செய்ய போவதாக வந்த தகவலையடுத்து, ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன்படி, மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டதை மாற்றும் வரை தமிழக அரசு நியமித்த பாடதிட்டக்குழுவை மாற்றக்கூடாது என கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக பாடத்திட்டத்தை மாற்ற பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதய சந்திரன் தலைமையில் தமிழக அரசு இரு குழுக்களை அமைத்துள்ளது. பாடத்திட்டம் மாற்றப்படும் வரை குழுவில் யாரையும் பணியிடமாற்றம் செய்யக்கூடாது எனவும், செயலர் உதய சந்திரனே தொடர்ந்து இந்த குழுவை வழி நடத்துவார் எனவும் கூறியுள்ளது. மேலும் 21ஆம் தேதி நடைபெறும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையில், இதுவரை பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என நீதிமன்றத்திற்கு குழுவின் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


