துணைக் குடியாசுத்தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்கும் விழாவில், கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் இருப்பதை அறிந்த விவசாயிகள் அவரை சந்திப்பதற்காக அங்கு சென்றனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாடு இல்லம் முன்பாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் முதல்வரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். முதல்வரை சந்தித்த அவர்கள் விவசாய கடன் ரத்து, காவிரி நதி நீர் பங்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் படி கோரிக்கை விடுத்தனர். முதல்வர் ஒவ்வொரு முறை டெல்லி செல்லும் போதும், அவரை விவசாயிகள் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே கவலைக்குரிய விஷயம்.