சமையல் கியாஸ் மானியம் ஏழைகளுக்கு நீடிக்கும் 

ஆண்டுக்கு 12 சமையல் கியாஸ் சிலிண்டர்களை சமையல் கியாஸ் இணைப்பு பெற்றுள்ள ஒவ்வொரு குடும்பமும் மானிய விலையில் பெற்று வருகின்றன. இந்த மானியத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கிடையே, சமையல் கியாஸ் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்துமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பாராளுமன்றத்தில் கூறினார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் சமையல் கியாஸ் மானியம் வழங்குவது நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

மானியம் ரத்து முடிவுக்கு எதிர்ப்பு எழுந்தநிலையில், மானியம் வழங்குவது சீரமைக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் கூறினார். இந்நிலையில், திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு, 20 குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வீட்டு உபயோகத்துக்காக வழங்கப்பட்டு வரும் சமையல் கியாஸ் மானியத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை. ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும் சமையல் கியாஸ் மற்றும் மண்எண்ணெய்க்கான மானியம் நீடிக்கும்’’ என்றும்,  வடகிழக்கு மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க வங்காள தேசத்தில் இருந்து திரிபுராவுக்கு இயற்கை எரிவாயு கொண்டுவர குழாய் பாதை அமைக்கப்படும்.

இதற்காக வங்காளதேச அரசுடன் பேசி வருகிறோம். விரைவில் நான் அங்கு செல்வேன். இத்திட்டத்துக்கு வங்காளதேச அரசு ஒப்புதல் அளித்தவுடன், சர்வதேச எல்லை அருகே ரெயில் பாதையை ஒட்டி இக்குழாய் பாதை அமைக்கப்படும். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.