ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் – எம்.எல்.ஏ. வெற்றிவேல்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அணியும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சிக்குள் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் எம்.எல்.ஏ. இன்று கூறியதாவது,

கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் நியமித்த புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் தலைமை கழகத்திற்கு விரைவில் வருவோம். அதை யாரும் தடுக்க முடியாது. எங்கள் தாய் வீட்டிற்கு போவதை போலீசாரால் எப்படி தடுக்க முடியும். இப்போது கூட நான் தலைமை கழகத்திற்கு போவேன். அது எங்கள் அலுவலகம்.
இப்போது அமைச்சர்கள் வாய்க்கு வந்தப்படி பேசுகிறார்கள். பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன் இவர்கள் எங்கே போனார்கள்? கட்சிக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தபோது டி.டி. வி.தினகரன் தான் ஒதுங்கி இருப்பதாக கூறினார்.

பிரிந்துள்ள இரு அணிகளும் சேருவதற்கு தடையாக இருக்க மாட்டேன் என்றும் கூறினார். இருஅணிகள் இணைவதற்கு 2 மாதம் அவகாசமும் கொடுத்தார். அனால் என்ன ஆனது? எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. பேச்சு வார்த்தை குழுவும் கலைக்கப்பட்டது. சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் இல்லையென்றால் இந்த ஆட்சியும் கிடையாது, இந்த அமைச்சர்களும் இல்லை. இருவரும் சிறைக்கு போன பிறகுதான் அமைச்சர்கள் இஷ்டத்துக்கு வாய் பேசுகிறார்கள். அவர் பொதுச்செயலாளராக தலைமைக் கழகத்திற்கு வந்த போதோ, இங்கிருந்து கட்சி பணிகளை கவனித்த போதோ வாய் திறக்காத அமைச்சர்கள் சேலை கட்ட வேண்டும்.

கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம் குறித்து கோர்ட்டில் வழக்கு உள்ளது. இது தொடர்பாக சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் ஆம்ஆத்மி கட்சி தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு டிஸ்மிஸ் செய்தது. தேர்தல் நேரத்தில் சின்னம் ஒதுக்குவது, சின்னத்தை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளராக யார் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. இதுபோன்ற பொய்யான தகவல்களை நண்பர் ஜெயக்குமார் பரப்பி வருகிறார். அவர் கோர்ட்டுக்கே போகாத வக்கீல். சட்டம் பேசுவது கேலி கூத்தாக உள்ளது.

பிரேக் இல்லாத வண்டியில் செல்லும் அவர் விபத்தை சந்திக்க நேரிடும். நாவை அடக்காவிட்டால் அவர் பேசிய பேச்சுக்கு வருத்தப்பட வேண்டிய நிலை வரும். லட்சக்கணக்கான உறுதி மொழி பத்திரங்கள் தொண்டர்களிடம் இருந்து பெறப்பட்டது. இருவரையும் அப்போது அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டனர். நண்பர் ஜெயக்குமார் தொடர்ந்து பேசினால் அவரது ரகசியங்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும். என்ன ரகசியம் என்பது அவருக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.