அமைச்சர் சி. விஜயபாஸ்கர், 31.07.2017அன்று முதல் புதுடெல்லியில் முகாமிட்டு நீட் விவகாரத்தில் ஒரு சுமுக முடிவு ஏற்படவேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றின் ஒரு பகுதியாக மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை ஒரே நாளில் மூன்று முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர். ஜிதேந்திர சிங்கையும் சந்தித்து வலியுறுத்தினர். அதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்திற்கு மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை மற்றும் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் சென்று தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக மீண்டும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரையுடன் மீண்டும் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வின்போது புதுடெல்லி முதன்மை உள்ளுரை ஆணையர் நா.முருகானந்தம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.