இன்று காலை 10 மணியளவில் திருவொற்றியூர், சத்திய மூர்த்தி நகரில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு அறையில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சுமார் 20 மாணவ- மாணவிகள் வகுப்பில் இருந்தனர். அப்போது வகுப்பறையில் இருந்த மின் விசிறி திடீரென கழன்று கீழே விழுந்தது. சுற்றிய வேகத்தில் மின் விசிறி விழுந்ததால் அதன் இறக்கைகள் கீழே இருந்த மாணவ-மாணவிகள் மீது வெட்டியது.
இதில் மாணவி மோனிஷா, மாணவன் கணேஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக தப்பினர். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயம் அடைந்த 2 பேரையும் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி மோனிஷாவுக்கு கன்னத்தில் தையல் போடப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்கு வாதம் செய்தனர். அப்போது “வகுப்பறையில் உள்ள மின் விசிறிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும் எனவும், மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் கலைந்து சென்றனர். இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.