கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 202 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த சிப்பந்திகள் பயணிகளின் இருக்கைக்கு மேலே உள்ள லக்கேஜ் வைக்கும் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்தனர். உடனே அவர்கள் அதனை அணைத்து பெரும் விபத்தை தவிர்த்தனர். பயணி ஒருவரின் பையில் இருந்த லிதியம் பேட்டரி அல்லது செல்போன் பேட்டரியில் இருந்து இந்த தீ பிடித்து இருக்கலாம் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரை இறங்கியது.
தீவிபத்து குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததால் வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் தயாராக இருந்தனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும், பயணிகள் அவசரகால வழியை பயன்படுத்தாமல் வழக்கமான வழியிலேயே விமானத்தில் இருந்து இறங்கினர். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.