வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 கடைசி நாள்

இன்று (திங்கட்கிழமை) 2016-17 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கலுக்கு கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், நேரில் தாக்கல் செய்ய இயலாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றபோதிலும், வருமான வரித்துறை அலுவலகங்களில் கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  ஏராளமானோர் நேரில் கணக்கு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி 31-7-2017 (இன்றுடன்) முடிவடைகிறது. 

இதுபற்றி வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “வருமான வரி கணக்கு தாக்கலுக்கு கடைசி நாள் 31ஆம் தேதி (இன்று) என்பதில் மாற்றம் இல்லை. ஏற்கனவே ஆன் லைனில் 2 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. இன்னும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது” என்று குறிப்பிட்டார். எனவே, இன்றைக்குள் வருமான வரி கணக்கினை பொதுமக்கள் வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலோ அல்லது வருமான வரித்துறை இணையதளத்தின் வழியாகவோ தாக்கல் செய்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகம் இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.