உயர்நீதிமன்றம் உத்தரவு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 % உள் ஒதுக்கீட்டு அரசாணை ரத்து உறுதி

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு  ஒரே நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத்தேர்வு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழியில் சமச்சீர் கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் ‘நீட்’ தேர்வில் அதிக அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பிளஸ்2  பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள். எனவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு 85 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை ரத்து செய்தது. தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை ரத்து செய்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து ஏற்கனவே அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. மேலும், தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும், குறித்த காலத்திற்குள் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.