Dancer Union Association Flood Relief distribution

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கி வருவதோடு, தமிழகத்தைச் சேர்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உயரிய பயிற்சி அளித்தல், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையங்கள் அமைத்தல், சிறந்த விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளத்தூர், படவீடு கிராமத்தைச் சேர்ந்த செல்வி பி.வி. நந்திதா அவர்கள் 2016ஆம் ஆண்டு மே மாதம் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்க வாகையர் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்க வாகையர் போட்டியில் வாகையர் பட்டமும், ஆகஸ்ட் மாதம் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்டோருக்கான 34-வது உலக சதுரங்க வாகையர் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கமும் வென்று நாட்டிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

செல்வி பி.வி.நந்திதாவின் இந்தச் சாதனைகளைப் பாராட்டி அவர் மேலும் பல சாதனைகள் படைக்க ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சதுரங்க விளையாட்டு வீராங்கனை செல்வி பி.வி.நந்திதா அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, பாராட்டினார்கள். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் (பொறுப்பு) சார்லஸ் மனோகர் மற்றும் செல்வி நந்திதாவின் பெற்றோர் உடனிருந்தனர்.