குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பாரதிய ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிடுகின்றனர். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து பாரதிய ஜனதாவில் அடைக்கலம் அடைந்த நிலையில் காங்கிரஸின் பலம் 51 ஆக குறைந்திருப்பதால் மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கட்சி மாறுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸின் 44 எம்எல்ஏக்கள் நேற்றிரவு பெங்களூருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதாவின் திட்டத்தை தோல்வி அடைய செய்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ சைலேஷ் பர்மார் தெரிவித்துள்ளார். முன்னதாக மாநிலங்களவை தேர்தலில் அமித் ஷாவை வெற்றிப் பெறச் செய்வதற்காக பாரதிய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், 10 கோடி ரூபாய் வரை கொடுத்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களை இழுத்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.