ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஜெயலலிதா விட்டுச் சென்றிருக்கும் இடத்தை நிரப்பப்போவது யார்? என்கிற கேள்வியும் பலமாகவே எழுந்துள்ளது. அந்த இடத்தை குறிவைத்தே ரஜினி – கமல் இருவரும் காய் நகர்த்த தொடங்கி இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசியலில் சிஸ்டம் சரியில்லை’’ என்று கூறி ரஜினி பரபரப்பு தீயை பற்ற வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது கமல், தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார். இதன் மூலம் அரசியல் களத்துக்கு யார் முதலில் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல், அந்த நிகழ்ச்சியால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது என்று கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசின் அத்தனை துறைகளும் கெட்டுப் போய் இருக்கின்றன என்று குற்றம் சாட்டினார். இதற்கு அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து கமல் மீது பாய்ந்தனர். கமலின் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதரவு அதிகரித்தது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ரசிகர்களும் முன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த கமல், தொடர்ந்து ஊழல் தொடர்பாக டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும், தமிழக அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியது ஏன் என்பது குறித்தும் வாரப்பத்திரிகை ஒன்றுக்கு கமல் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலாசார சீரழிவு இருக்கிறது என்று பலர் சொல்கிறார்கள். நிலா காயுது நேரம் நல்ல நேரம். கட்ட வண்டி கட்ட வண்டின்னு பாட்டு பாடியவர்கள்தானே நாம். அப்போது அழியாத கலாச்சாரமா இப்போது அழிஞ்சிடப் போகுது. அதெல்லாம் கலாச்சார சீரழிவுன்னு நினைத்தால் சீரழிவுதான். கேளிக்கைன்னு நினைத்தால் கேளிக்கைதான். யாரைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர் என்று சொல்கிறீர்கள்.
ஜெயலலிதாவுடன் நான் பேசிக் கொண்டிருக்கும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் போட்டுள்ளனர். அதில் கமலை போல அமர்ந்து நீங்கள் பேசி இருப்பீர்களா? என்றும் கேட்டுள்ளனர். எனக்கு முதுகெலும்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை இதனை வைத்தே புரிந்து கொள்ளலாம். ஜெயலலிதாவை கடைசி வரைக்கும் நான் மேடமாகத் தான் பார்த்தேன். ஆனால் விருமாண்டி படத்திற்கு பிறகு அவர் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. நான் கட்டம் எதுவும் போடவில்லை. என்னை இந்த கட்டத்திற்கு (ஊழல் குற்றச்சாட்டு கூறும் அளவுக்கு) கொண்டு வந்து விட்டார்கள்.
15 வருடமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து கொண்டிருந்தனர். முதலில் வலியில் பேசினேன். பின்னர் கோபத்தில் பேசினேன். இப்போது மேலும் உத்வேகத்துடன் பேசுகிறேன். இது முதிர்ச்சியாக கூட இருக்கலாம். தெருவில் போய் நின்று மக்களை எழுப்பி கோஷம் போடுடா என்று சொல்கிறவன் அரசியலுக்கு வந்துட்டான் என்றுதானே அர்த்தம். எனது இந்த எதிர்ப்பு குரல் அரசுக்கு எதிராக மட்டுமல்ல என்பது மு.க.ஸ்டாலினுக்கும் தெரியும். ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்தாலும் வாழ்த்துடன் முன்கூட்டியே இந்த எச்சரிக்கையையும் சொல்வேன்.
நண்பர் ரஜினியிடமும் இதைதான் சொல்லி உள்ளேன். தமிழக மக்கள் தலைவர்களை தேடுவதை விட்டுவிட்டு சரியான ஒரு சமூக தொண்டனை தேட வேண்டும். நல்ல ஆட்சி இல்லாத போதும் குரல் கொடுப்பதில் முதல்வனாக இருக்க வேண்டும். காந்தி, பெரியார், காமராஜர் ஆகியோர் அந்த மாதிரியான முதல்வர்தான். அதை தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். இந்த ஆட்சி தானாகவே கலையும். கலைக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீ யார் என்று கேட்பார்கள். ஜோசியக்காரனா? என்றும் கேட்பார்கள். நான் மக்களில் ஒருத்தன்.
ஆட்சியை கலைப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்வதாக நினைப்பது வேடிக்கை. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்து கொண்டுள்ளனர். விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு படங்களுக்கு பிறகு எனது அடுத்த படம் ‘தலைவன் இருக்கின்றான்’. படத்தின் தலைப்பை இப்போது முடிவு செய்யவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தலைப்பை பதிவு செய்து விட்டேன், என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.