சிட்டுக்குறிஞ்சி விமர்சனம்

காதல், குற்றவுணர்வு, அதிர்ச்சித் திருப்பம் என எளிமையான பின்னணியில் அழுத்தமான சமூகப் பிரச்சினையைப் பேசியிருக்கும் சிட்டுக்குறிஞ்சி.

கொடைக்கானல் பூம்பாறைக்கு வனம் தொடர்பான ஆய்வுக்காக வருகிறார் நாயகன் ரஜித் சி.ஆர். தங்குவதற்கு இடம் கிடைக்காத சூழலில், நாயகி தீப்ஷிகாவின் வீட்டில் ஒருநாள் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த ஒரு நாளில் தீப்ஷிகா காட்டும் அன்பும் அக்கறையும் ரஜித்தின் மனதில் காதலாக மாறுகிறது. ஆனால் ஏற்கெனவே திருமணமான தீப்ஷிகா, அவரது காதல் முயற்சியை ஏற்க மறுக்கிறார். இதையடுத்து தனது சொந்த ஊரான கேரளாவுக்குத் திரும்பும் ரஜித், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தீப்ஷிகாவைத் தேடி வருகிறார். அப்போது அவருக்காகக் காத்திருக்கும் அதிர்ச்சியும், அதன் பின்னணியில் இருக்கும் உண்மைகளும்தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்துள்ள ரஜித் சி.ஆர். கதாபாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, குற்றவுணர்ச்சியுடன் தவிக்கும் தருணங்களில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. தீப்ஷிகா தனது முதிர்ச்சியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். ஸ்ரீராம் கார்த்திக், நக்ஷா சரண், விஜே பப்பு, ஜி.எம்.குமார் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் மிகையில்லாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

பிரான்சிஸின் ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான பலம். கதையில் இடம்பெறும் இருவேறு காலகட்டங்களையும் அதன் தன்மை மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, பூம்பாறையின் இயற்கைச் சூழலும் கதையின் மனநிலைக்கு ஏற்ற காட்சியமைப்புகளும் ரசிக்க வைக்கின்றன. மாறாவின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு பயணித்து கதைக்கு வலுசேர்க்கிறது.

இயக்குநர் வீ.ஜே. மீனாட்சி சுந்தரம், ஆணவக்கொலை என்ற முக்கியமான சமூகப் பிரச்சினையை வழக்கமான பாணியில் அணுகாமல், ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்ல முயன்றுள்ளார். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் சில காட்சிகள் வேறொரு தளத்தில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்த திருப்பங்கள் கதையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக, பார்வையாளர்களின் கணிப்பைத் தாண்டி திரைக்கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனமான முயற்சி.

அதேநேரத்தில், கதையோட்டத்திற்கு அவசியமில்லாத சில நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. கருத்தை பார்வையாளர்களுக்குப் புரியவைத்த பிறகும் சில வசனங்கள் நீண்டுகொண்டே செல்வது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் நேர்த்தியாக அமைந்திருக்கும்.

மொத்தத்தில், இன்றைய சமூகத்திலும் பேசப்பட வேண்டிய ஆணவக்கொலை குறித்த கருத்தை, காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் எளிமையாகப் பதிவு செய்திருக்கும் இந்தச் சிறிய திரைப்பட முயற்சி பாராட்டுக்குரியது. குறைகள் சில இருந்தாலும், சொல்ல வந்த கருத்துக்காகப் பார்க்க வேண்டிய படமாக அமைகிறது.