அப்பாவின் அன்புக்கு அளவே இல்லை… உணர்வுகளுடன் களமிறங்கும் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’!

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம், தங்களது அனுபவங்கள் மற்றும் திரைப்படத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் மு. மாறன், இதுவரை தான் இயக்கிய படங்கள் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் அமைந்திருந்த நிலையில், இந்த முறை முற்றிலும் மாறுபட்ட கதையைத் தேர்வு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். கதையின் முதல் பாதியைக் கேட்டவுடனேயே விஜய் ஆண்டனி நடிக்கச் சம்மதித்ததாகவும், இரண்டாம் பாதியைக் கேட்டதும் படத்தை உடனடியாகத் தொடங்கலாம் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். நல்ல கதைக்கு எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும் கூறினார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ‘அப்பா குட்டி’ கதையின் முதல் பாதியே தன்னைக் கவர்ந்ததாகவும், கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். படத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், இயக்குநர் மு. மாறனின் திட்டமிடப்பட்ட பணியையும் பாராட்டினார். ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லிதன்யா உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பையும் பாராட்டியதுடன், ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பும் வெளியானது.

தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய ப்ரீத்தி அஸ்ராணி, அப்பாக்கள் தங்களது அன்பையும் தியாகங்களையும் பல நேரங்களில் வெளிப்படுத்தாமல் இருப்பதை இந்தப் படம் அழுத்தமாகப் பேசும் என்றார். படத்தைப் பார்த்த பிறகு பலரும் தங்களது அப்பாவைத் தொடர்புகொண்டு பேசுவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார். பேபி லிதன்யாவுடன் நடித்த அனுபவத்தையும், விஜய் ஆண்டனியின் எளிமையான அணுகுமுறையையும் அவர் பாராட்டினார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், படத்தைப் பார்த்தபோது தானும் தனது மனைவியும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். விஜய் ஆண்டனி தந்தையாகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும், ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் பேபி லிதன்யாவின் நடிப்பு படத்திற்கு வலுசேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ் தெரியாத சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகள்கூட படத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டுப் பாராட்டியதாகக் குறிப்பிட்டார். Zee தொலைக்காட்சி படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியுள்ளதையும் அவர் தெரிவித்தார்.

பாடலாசிரியர்கள் ஏகாதசி மற்றும் அருண் பாரதி இருவரும் படத்தில் இடம்பெற்றுள்ள அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் குறித்துப் பேசினர். குறிப்பாக, அப்பாவின் அன்பையும் பிரிவையும் உணர்த்தும் பாடல் வரிகள் பலரையும் நெகிழ வைத்துள்ளதாகக் கூறினர். நடிகர்கள் மூணாறு ரமேஷ், முருகானந்தம், ஜென்சன் திவாகர், ஹரிப்ரியா, ஹரிதா, லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட கலைஞர்களும் இயக்குநர் மற்றும் விஜய் ஆண்டனியுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இயக்குநர்கள் சசி, மந்திரமூர்த்தி, ஆனந்த் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் படத்தின் கதையையும் குழுவினரின் உழைப்பையும் பாராட்டினர்.

மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். பேபி லிதன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபைவ் ஸ்டார் செந்தில் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகளுடன் ஆக்‌ஷன் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்களையும் இணைத்து உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.