திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘பனிவிழும் இரவு’

பவி கிரியேஷன்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘பனிவிழும் இரவு’. அருண் கார்த்தி கதாநாயகனாகவும், எனாக்ஷி கங்குலி கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கியுள்ளார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் சதா முருகன் பேசுகையில், தமிழ் மொழியின் அழகையும் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில் படத்திற்குப் பெயர் தேர்வு செய்ததாகக் கூறினார். இதுவரை சொல்லப்படாத மாறுபட்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளதாகவும், படத்தின் இறுதிவரை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் திருப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஊடகங்களும் ரசிகர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான ஜெயக்குமார் தங்கவேல் பேசுகையில், குறைந்த பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இப்படத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகக் குறிப்பிட்டார். படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்தாலும், ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஆதரவுடன் படத்தை உருவாக்கியதாகவும், ரசிகர்களுக்கு இப்படம் புதிய அனுபவத்தைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

திரை ஆர்வலர் கேபிள் சங்கர் பேசுகையில், சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்கள் நல்ல கதையம்சத்துடன் வெளியாகும்போது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் கூறினார். இப்படத்தின் கதாநாயகன் அருண் கார்த்தியின் நடிப்பையும், கதாநாயகி எனாக்ஷி கங்குலியின் பங்களிப்பையும் பாராட்டினார். படக்குழுவினரின் அர்ப்பணிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

நடிகர் உறியடி சுருளி பேசுகையில், சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றி பெறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், ‘பனிவிழும் இரவு’ படக்குழுவினருக்கும் நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

நடிகர் கருப்பு நம்பியார் பேசுகையில், இப்படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். திறமையுடன் தொடர்ந்து முயற்சி செய்யும் கலைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

தயாரிப்பாளர் சிவசாமி பேசுகையில், இப்படத்தின் தலைப்பும் கதைக்களமும் தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார். ஒளிப்பதிவாளர் ஜெயக்குமாரின் அர்ப்பணிப்பையும், கதாநாயகன் அருண் கார்த்தியின் விளம்பரப் பணிகளில் காட்டும் ஈடுபாட்டையும் பாராட்டினார். சிறு முதலீட்டுத் திரைப்படங்களுக்கும் ஊடகங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் சுரேஷ் பாபு பேசுகையில், இயக்குநர் செ.ரா. ராஜேஷ் தனது நண்பர் என்றும், அவர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார். திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பணியாற்றியிருப்பது படத்திற்குப் பலம் சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

விநியோகஸ்தர் தனசேகரன் பேசுகையில், படத்தின் கதையம்சம் தன்னைக் கவர்ந்ததால் வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறினார். அருண் கார்த்தியின் நடிப்பு, சதா முருகனின் இசை மற்றும் ஜெயக்குமாரின் ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டிய அவர், இப்படம் தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் தரத்தை எடுத்துக்காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

விநியோகஸ்தர் ராமகிருஷ்ணன் பேசுகையில், சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கும் ஆதரவளித்து அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தங்களின் நோக்கம் என்றார். நல்ல திரைப்படங்களின் வெற்றிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கதாநாயகி எனாக்ஷி கங்குலி பேசுகையில், தமிழ்த் திரையுலகில் பணியாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். படப்பிடிப்பின்போது தனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து உதவிய ஜெயக்குமார் மற்றும் சக நடிகர் அருண் கார்த்தி ஆகியோருக்கு நன்றி கூறினார். வளர்ந்து வரும் கலைஞர்களான தங்களின் படைப்புக்கு ஊடக நண்பர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கதாநாயகன் அருண் கார்த்தி பேசுகையில், தனது தந்தையை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ராஜேஷ், தயாரிப்பாளர் சதா முருகன், ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்ததாகவும், படத்தின் இறுதிக் காட்சிகளைப் பார்த்தபோது மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார். மேலும், படத்தின் உருவாக்கத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தன்னை ஊக்கப்படுத்திய கேபிள் சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மாறுபட்ட திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பனிவிழும் இரவு’ திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் ரசிகர்களின் ஆதரவையும் வரவேற்பையும் எதிர்பார்த்துள்ளனர்.