தாய் நிலம் விமர்சனம்

போரின் வலியையும் தந்தை – மகள் பாசத்தையும் பேசும் படம் தாய் நிலம்.

இலங்கைப் போரின் கொடூரத்திலிருந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு, தந்தையும் மகளும் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்து சேர்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் இருப்பது புதிய மண், புதிய மனிதர்கள், பசி, வேலை இல்லாமை எனப் பல சவால்கள். ஒரு பேருந்து நிறுத்தத்தையே தங்களது தற்காலிக வசிப்பிடமாக மாற்றிக்கொண்டு, நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்கும் இவர்களின் பயணமே படத்தின் மையக்கதை.

போர், அகதிகளின் வாழ்க்கை போன்ற கனமான விஷயங்களை மையமாக வைத்திருந்தாலும், அவற்றை வெறும் வன்முறைக் காட்சிகளாகக் காட்டாமல் தந்தை – மகள் உறவின் வழியாக அணுகியிருப்பது இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவனின் முக்கியமான முயற்சி.

தந்தையாக நடித்துள்ள டாக்டர் அமர் ராமச்சந்திரன், தனது கதாபாத்திரத்தின் வலியை மிகைப்படுத்தாமல் வெளிப்படுத்துகிறார். மகளின் மீதான அன்பு, சொந்த மண்ணை இழந்த துயரம், எதிர்காலம் குறித்த அச்சம் என பல்வேறு உணர்வுகளை அவரது கண்களும் உடல்மொழியும் நன்றாகக் கடத்துகின்றன.

சிறுமி நேஹா அமரும் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். போரின் தாக்கத்தைக் கண்ட குழந்தையாகவும், கிடைக்கும் சிறிய மகிழ்ச்சிகளைக் கொண்டாட முயலும் சிறுமியாகவும் அவரது நடிப்பு நம்ப வைக்கிறது. தந்தை – மகள் இணைந்து வரும் காட்சிகளே படத்தின் உணர்வுப்பூர்வமான பலமாக இருக்கின்றன.

பாலாசிங் இடம்பெறும் கதாபாத்திரமும் மனதில் நிற்கிறது. உதவி தேவைப்படுபவர்களுக்கு மனிதநேயத்துடன் கரம் நீட்டும் மனிதராக அவரது கதாபாத்திரம் அமைந்திருப்பது படத்தின் மைய உணர்வுக்கு வலு சேர்க்கிறது.

அவுசேப்பச்சனின் பின்னணி இசை படத்தின் வலியையும் ஏக்கத்தையும் நன்றாக பிரதிபலிக்கிறது. பாடல்களும் கதையின் உணர்வுகளோடு இணைந்து பயணிக்கின்றன. தாமரை உள்ளிட்டோரின் வரிகள் பாசம், பிரிவு, வலி என வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

பிரசாந்த் பிரணவத்தின் ஒளிப்பதிவு படத்தின் மற்றொரு பலம். போர் தொடர்பான காட்சிகளை அதிர்ச்சியூட்டும் வகையில் காட்டாமல், மனிதர்களின் வாழ்க்கையில் அதன் தாக்கத்தை மையப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில், படத்தின் சில இடங்களில் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் தந்தை – மகள் தமிழ்நாட்டில் எதிர்கொள்ளும் சூழல்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நல்லிணக்கத்துடனேயே நகர்வது சற்று செயற்கையாகத் தோன்றுகிறது. கதையின் இயல்பான தன்மைக்கு இன்னும் கொஞ்சம் யதார்த்தம் சேர்த்திருக்கலாம்.

அகதிகளின் வாழ்க்கை, போர் ஏற்படுத்தும் உளவியல் காயங்கள், தாய்மண்ணை இழந்தவர்களின் ஏக்கம் என கனமான விஷயங்களை பேசும் இப்படம், அதனை ஒரு தந்தை – மகள் உறவின் வழியாக மென்மையாகச் சொல்ல முயன்றிருக்கிறது.

மொத்தத்தில், போரின் கொடூரத்தை நேரடியாகப் பேசாமல், அதன் பின்னால் இருக்கும் மனிதர்களின் வலியைப் பதிவு செய்யும் படைப்பு. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு மற்றும் மனிதநேயத்தை முன்னிறுத்தும் அணுகுமுறை படத்தின் பலம். சில காட்சிகளில் இருக்கும் இயல்புத்தன்மை குறைபாடுகளைத் தாண்டி, உணர்வுகளால் மனதில் நிற்கும் ஒரு படமாக இது அமைகிறது.