சிக்மா விமர்சனம்

கேம்ப்ளிங் களத்தில் அதிரடி ஆட்டம் – ‘சிக்மா’

கேம்ப்ளிங்கை மையமாக வைத்து, அதிரடி திருப்பங்களுடன் ஒரு விறுவிறுப்பான கதையை உருவாக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய். சூதாட்டத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து உருவாகும் ஹீரோ – வில்லன் மோதலும் படத்தின் முக்கியக் களமாக அமைகிறது.

தனது தாயார் விட்டுச் சென்ற நூலகத்தை நடத்தி வரும் சந்தீப் கிஷன், அதைத் தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார். சூதாட்டத்தில் நல்ல திறமை கொண்ட அவர், சில கேம்ப்ளிங் ஆட்டங்களுக்குப் பின்னால் நடக்கும் மோசடிகளை கண்டுபிடிக்கிறார். இதன் பின்னணியில் இருக்கும் சம்பத் தலைமையிலான குழுவின் குற்றச் செயல்களும் வெளிவர, கதை வேகமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது.

சந்தீப் கிஷன் ஆக்ஷன் காட்சிகளில் தனது உடல்மொழி மற்றும் வேகமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரத்தின் குடும்பப் பின்னணியுடன் தொடர்புடைய உணர்வுக் காட்சிகளுக்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால், அவரின் கதாபாத்திரம் பார்வையாளர்களுடன் நெருக்கமாக இணைந்திருக்கும்.

ஃபரியா அப்துல்லா அழகாகத் தோன்றுகிறார். ஆனால் கதையில் அவரது கதாபாத்திரத்திற்கான இடம் குறைவாக இருப்பதால், நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் பெரிதாக இல்லை. ராஜு சுந்தரம் வரும் காட்சிகள் அவ்வப்போது படத்திற்கு இலகுவான தன்மையைத் தருகின்றன. அன்புதாசனின் கதாபாத்திரம் நன்றாக வேலை செய்கிறது. சம்பத் வழக்கமான வில்லன் பாணியில் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஷிவ் பண்டிட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக படம் கவனம் பெறுகிறது. கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. குறிப்பாக ஷாட் கம்போசிங் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு வேகத்தையும் ஸ்டைலையும் சேர்க்கிறது.

தமனின் இசையில் இன்னும் அதிகமான எலிவேஷனை எதிர்பார்க்க முடிகிறது. பாடல்களிலும் பின்னணி இசையிலும் கதையின் பரபரப்புக்கு இணையான தாக்கம் இருந்திருக்கலாம்.

அறிமுக இயக்குநர் என்ற எதிர்பார்ப்புடன் படம் தொடங்கினாலும், மேக்கிங்கில் அது தெரியாத அளவுக்கு காட்சிகளை பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார் ஜேசன் சஞ்சய். கேம்ப்ளிங் உலகைச் சுற்றி கதையை உருவாக்கியிருக்கும் விதமும், அதற்கான காட்சியமைப்பும் படத்தின் முக்கியமான பலங்கள்.

ஆனால் திரைக்கதையில் உணர்வுப்பூர்வமான இணைப்பு சற்று குறைவாக இருக்கிறது. குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் அவர்களின் உணர்வுகள் மீது பார்வையாளர்களுக்கு வலுவான பிணைப்பு உருவாகாதது படத்தின் தாக்கத்தை குறைக்கிறது. போதைப் பொருட்களை மையப்படுத்திய சில நகைச்சுவைக் காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால் படத்தின் அணுகுமுறை இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும்.

இருப்பினும், இந்தக் குறைகளுக்கு இடையிலும் படம் தனது வேகத்தை இழக்காமல் செல்கிறது. அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் கதையை முன்னோக்கி நகர்த்துகின்றன. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் வரும் கேம்ப்ளிங் க்ளைமாக்ஸ், படம் ஆரம்பித்த ஆட்டத்தை ஒரு சுவாரஸ்யமான முடிவுக்கு கொண்டு செல்கிறது.

மொத்தத்தில், குறைகளும் நிறைகளும் கலந்திருந்தாலும், வேகமான திரைக்கதை, ஸ்டைலான மேக்கிங் மற்றும் இறுதிக்கட்ட திருப்பங்களால் கவனம் ஈர்க்கும் கேம்ப்ளிங் த்ரில்லர் இந்தப் படம்.