அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் இப்படம் அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழகத்தில் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், குழந்தை நட்சத்திரம் சாரா சச்தேவ், படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன், எஸ்.எஸ். ராஜமௌலி தனது படங்களின் மூலம் இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தை உலக அளவில் கொண்டு சென்றவர் என பாராட்டினார். ஃபஹத் பாசிலின் நடிப்புக்கும், படத்தின் டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குடும்ப ரசிகர்களையும் இப்படம் கவரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா, ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ தங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்றும், நேர்மையான மற்றும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெறும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் ரசிகர்களை கவரும் என்றும் கூறினார்.
படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி, இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி மற்றும் படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார். திரைக்கதையில் இருந்த கருத்துகளை திரைமொழியில் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளதாகவும், ஃபஹத் பாசில் மற்றும் சாராவின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குழந்தை நட்சத்திரம் சாரா சச்தேவ், இப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தெரிவித்தார். சாகசமும், மாயாஜாலமும் நிறைந்த புதிய உலகத்திற்கு ரசிகர்களை இப்படம் அழைத்துச் செல்லும் என்றும், அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து படத்தை ரசிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி பேசுகையில், இப்படத்தின் கதை தன்னை கவர்ந்த விதத்தை பகிர்ந்து கொண்டார். ஷஷாங்க் யெலெட்டி தன்னிடம் மூன்று மணி நேரம் எடுத்துக்கொண்டு கதையைச் சொல்லத் தயாராக இருந்தபோது, ஐந்து நிமிடத்தில் கதையை சொல்ல முடியுமா என்று கேட்டதாகவும், அதற்கு இயக்குநர் ஒரே ஒரு வரியில் ‘ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை’ என்று கூறியதாகவும் தெரிவித்தார். அந்த ஒரு வரியே தன்னை வெகுவாக கவர்ந்ததாக ராஜமௌலி குறிப்பிட்டார்.
ஃபஹத் பாசில் இப்படத்தில் சூரி என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளதாகவும், குழந்தை நட்சத்திரம் சாரா அவருக்கு இணையாக சிறப்பாக நடித்துள்ளதாகவும் ராஜமௌலி பாராட்டினார். முதல் பிரதியைப் பார்த்தபோது தாம் சிரித்தும் அழுதும் ரசித்ததாகவும், இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், தமிழில் இப்படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், தெலுங்கு பதிப்பில் பின்னணி குரல் கொடுத்த பாலகிருஷ்ணாவுக்கும், மலையாளத்தில் குரல் கொடுத்த மோகன்லாலுக்கும் ராஜமௌலி நன்றி தெரிவித்தார்.
நடிகர் ஃபஹத் பாசில் பேசுகையில், இப்படத்தின் கதை இதுவரை தான் கேட்டிராத வகையில் புதுமையாக இருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்ததாக தெரிவித்தார். சுமார் 100 முதல் 120 நாட்கள் இப்படத்திற்காக படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், படத்தை பார்த்தபோது தானே வியந்ததாகவும் கூறினார்.
குழந்தை நட்சத்திரம் சாராவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட ஃபஹத், சாரா மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்ததாகவும், இருவரும் இணைந்து படத்தில் சிறப்பான மேஜிக்கை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இப்படம் ரசிகர்களை சிரிக்கவும், அழவும் வைக்கும் அளவிற்கு உணர்வுகளுடன் கூடிய அழகான திரைப்படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நடிகர் சூர்யா பேசுகையில், ஃபஹத் பாசில் – எஸ்.எஸ். ராஜமௌலி – எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ‘ஒரு மனிதன் பேயை கடத்தினால் என்ன நடக்கும்?’ என்ற வித்தியாசமான கதைக்களமே இப்படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஃபஹத் பாசில் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும்போது தனது இமேஜை கருத்தில் கொள்ளாமல், கதையும் கதாபாத்திரமும் ரசிகர்களை சென்றடையுமா என்பதையே முக்கியமாக பார்க்கிறார் என்றும் சூர்யா பாராட்டினார். குழந்தைகள் ரசிக்கும் வகையிலும், அதே நேரத்தில் பெரியவர்களுக்கான உணர்வுகளையும் கொண்ட படமாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்திய சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற எஸ்.எஸ். ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்த சூர்யா, புதிய திறமைகளையும் புதிய கதைகளையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவருடைய அணுகுமுறையை பாராட்டினார்.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ், இப்படத்தின் டிரெய்லரை பார்த்து பாராட்டியதாகவும், படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் நிலையில் ரசிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாயாஜாலம், சாகசம், நகைச்சுவை மற்றும் உணர்வுகள் கலந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’, அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.



