‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் சார்பில் ராசி சிதம்பரம் படத்தை வெளியிடுகிறார்.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் அபிநயா, கதையின் மீதான நம்பிக்கையில்தான் படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாகவும், அன்பான தம்பதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதையும் படம் பேசுவதாகவும் தெரிவித்தார்.
கதாசிரியர் விக்னேஷ் ராஜா, ஒரு உண்மைச் சம்பவத்தின் அனுபவத்திலிருந்து இப்படத்தின் கதைக்கான முதல் விதை உருவானதாகக் கூறினார். இது கனவு வாழ்க்கையை வாழ நினைக்கும் தம்பதிகள் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்ட காதல் கதை என்றும் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகவும் ரசித்து பணியாற்றிய படம் இது என்றும், படத்தின் இசை உருவாக்கம் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வனின் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், ப்ரீத்தி முகுந்தனும் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருவதாகத் தெரிவித்தார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அசோக் செல்வன் ஆக்ஷன் ஹீரோவாகவும் வளர்ந்து வருகிறார் எனக் குறிப்பிட்டார்.
படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், ‘அன்பில் அவன்’ தனக்கு மிகவும் நெருக்கமான படமாக மாறியதாகவும், 45 நாட்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியதாகவும் தெரிவித்தார். படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பாராத விருந்தாக இருக்கும் என்றும் கூறினார்.
இயக்குநர் ஆர். கார்த்திகேயன், பல்வேறு தடைகளைத் தாண்டி இப்படம் உருவாகியுள்ளதாகவும், படத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். நடிகை ப்ரீத்தி முகுந்தன், அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் தன்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டு வழிகாட்டியதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அன்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் ஆக்ஷன் என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



