“‘மண்டாடி’ வெற்றிக்கு காரணம் மக்கள் தான்… சூரி முதல் வெற்றிமாறன் வரை நெகிழ்ச்சி பேச்சு

அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்ட இந்த விழா, படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக உற்சாகமாக நடைபெற்றது.

சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன், ஸ்டன் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். டி.ஆர்.கே. கிரண் கலை இயக்கத்தையும், பீட்டர் ஹெய்ன் ஆக்‌ஷன் காட்சிகளையும் கவனித்துள்ளனர். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ஒரு திரைப்படத்தைப் பற்றி பேசும்போது முதலில் மக்களின் ஏற்புதான் முக்கியம் என்றும், மக்கள் ஒரு படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் என்றால் அதை நாமும் கொண்டாட வேண்டும் என்றும் கூறினார். ‘மண்டாடி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் நீண்ட காலமாக போராடி வந்த இடத்தை தற்போது அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இனி வரும் காலங்களில் நிதானமாகப் பயணிக்க வேண்டும் என வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் சினிமா மீதான ஈடுபாட்டையும் வெற்றிமாறன் பாராட்டினார். ‘விடுதலை 1’ படத்தின்போதும், தற்போது ‘மண்டாடி’ படத்திலும் இயக்குநர்களின் மீது நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் வழங்கியவர் எல்ரெட் குமார் என்று குறிப்பிட்டார்.

மேலும், சூரியின் வளர்ச்சி குறித்துப் பேசிய வெற்றிமாறன், ஒரு சிறிய வாய்ப்பில் தொடங்கிய அவரது பயணம் இன்று கதாநாயகனாகவும் மக்கள் தங்களில் ஒருவராகக் கொண்டாடும் அளவிற்கும் உயர்ந்திருப்பதாகக் கூறினார். சூரியின் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் எளிமையே இந்தப் பயணத்திற்கு முக்கிய காரணங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசும்போது, இயக்குநர் மதிமாறனின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் திரைக்கதையின் மீது கொண்ட நம்பிக்கையைப் பாராட்டினார். திரைக்கதையில் இருந்ததைத் தவிர தேவையற்ற காட்சிகளை எடுக்கமாட்டேன் என்று மதிமாறன் தன்னிடம் உறுதியளித்ததாகவும், அதன்படியே அவர் செயல்பட்டதாகவும் கூறினார்.

‘மண்டாடி’ பல்வேறு தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்ட படம் என்றும், ஐமேக்ஸ், டால்பி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வெளியானதாகவும் எல்ரெட் குமார் தெரிவித்தார். மேலும், ஆரம்பத்தில் ஒரு நடுத்தர பட்ஜெட் படமாகத் தொடங்கிய ‘மண்டாடி’, இயக்குநரின் கனவையும் தயாரிப்பாளரின் நம்பிக்கையையும் தொடர்ந்து பெரிதாக வளர்ந்ததாகக் கூறினார்.

சூரியின் எளிமை மற்றும் சக கலைஞர்கள், தொழிலாளர்கள் மீதான மரியாதையையும் அவர் குறிப்பிட்டு பாராட்டினார். அதேபோல், சுஹாஸ், மஹிமா நம்பியார், பால சரவணன், பீட்டர் ஹெய்ன், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினரின் பங்களிப்பையும் பாராட்டி அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரவீந்திர விஜய், ஹைதராபாத் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை எனக் கூறி வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். ‘மண்டாடி’ நீண்ட காலம் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என்றும், படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளைப் பாராட்டியும் அவர் பேசினார்.

கதைநாயகி மஹிமா நம்பியார் பேசும்போது, ஆரம்பத்தில் தனது கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தனக்கு தயக்கமும் பயமும் இருந்ததாகவும், இயக்குநர் மதிமாறன் கொடுத்த நம்பிக்கையால் அதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். இன்று அந்தக் கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதாகத் தெரிவித்தார். திரையரங்குகளில் சூரியின் வெற்றியை மக்கள் தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேசும்போது, ‘மண்டாடி’ படத்தின் வெற்றியை பாய்மரப்படகு சொந்தக்காரர்கள் மற்றும் மீனவர் சமூகத்தினருக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். தலைமுறை தலைமுறையாக கடலோடு போராடி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வரும் அவர்களின் வாழ்க்கையை படத்தின் மூலம் பதிவு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி.