சண்டைகாரி விமர்சனம் ரேட்டிங் 3/5

லண்டனில் தொடங்கும் கதை. வேலை தேடி செல்லும் விமல், ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கு அவரது மேலதிகாரியாக இருப்பவர் ஸ்ரேயா. எதற்கெடுத்தாலும் கோபப்படும் பாஸுக்கும், எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்ளும் அசிஸ்டெண்ட்டுக்கும் ஆரம்பத்திலேயே ஏழாம் பொருத்தம்.

இந்தச் சூழலில் ஸ்ரேயாவுக்கு லண்டனில் தங்குவதில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை சமாளிக்க விமலை போலி திருமணத்தின் மூலம் தனது கணவராக நடிக்க வைக்கிறார். விமலுக்கும் லண்டனில் சில தேவைகள் இருப்பதால் இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிக்கிறார். இதற்குப் பிறகு இந்த ‘Fake’ திருமணம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் குழப்பங்களும், அதைச் சுற்றி நடக்கும் நகைச்சுவை சம்பவங்களுமே படத்தின் மையக்கதை.

ஸ்ரேயா, தனது கதாபாத்திரத்தின் கோபத்தையும் ஸ்டைலையும் ஓரளவுக்கு வெளிப்படுத்துகிறார். தமிழ் வசனங்களை உதட்டசைவுடன் பொருத்தமாகக் கொண்டு வருவதில் சில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது. அதேநேரம், அவரது திரைத் தோற்றம் இன்னும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே உள்ளது.

விமலுக்கு இயல்பாகக் கையாளக்கூடிய கதாபாத்திரம். அதனால் பெரிய சிரமம் இல்லாமல் தனது பாணியில் நடித்து ஓகே மார்க் வாங்குகிறார். பிற்பாதியில் பிரபு, கே.ஆர். விஜயா உள்ளிட்டோர் தங்களுக்குக் கிடைத்த காட்சிகளில் கவனம் பெறுகிறார்கள். லண்டன் பகுதிகளில் சத்யன் வரும் காட்சிகள் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன.

ஒளிப்பதிவாளர் குருதேவ், கிராமப்புறக் காட்சிகளின் அழகையும் லண்டனின் பின்னணியையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். இரண்டு மாறுபட்ட களங்களையும் காட்சிரீதியாக ரசிக்க வைக்கிறார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ், பழைய காலத்தில் வெற்றி பெற்ற இசை பாணியை நினைவுபடுத்தும் மெட்டுகளை பயன்படுத்தியிருக்கிறார். பாடல்கள் பெரிதாக புதிய அனுபவத்தைத் தரவில்லை என்றாலும், பின்னணி இசை ஓரளவுக்கு படத்தின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.

கமர்ஷியல் படங்களை இயக்குவதில் அனுபவம் கொண்ட இயக்குநர் மாதேஷ், சுவாரஸ்யமான ஒன்லைனை தேர்ந்தெடுத்திருக்கிறார். கோபக்கார பாஸ் – சாதுவான அசிஸ்டெண்ட் – போலி திருமணம் என்ற இந்தக் கலவை காமெடிக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கிறது.

ஆனால் அந்த ஒன்லைனை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றுவதில் தடுமாற்றம் தெரிகிறது. கதையை முன்னோக்கி நகர்த்தும் வலுவான உந்துதல் இல்லாததால், சில இடங்களில் படம் தொய்வடைகிறது. கதாபாத்திரங்களுடன் முழுமையாக பயணிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.

இருப்பினும், ஆங்காங்கே வரும் சில காமெடி காட்சிகளும், நடிகர்களின் இயல்பான நடிப்பும் படத்தை ஓரளவு சுவாரஸ்யமாக வைத்திருக்கின்றன.

மொத்தத்தில், நல்ல காமெடி களத்திற்கான வாய்ப்புள்ள கதையை எடுத்துக்கொண்டு, அதை முழுமையான பொழுதுபோக்கு படமாக மாற்றத் திரைக்கதை தவறிவிட்டது. சில சிரிப்புகளுக்காக மட்டும் ‘சண்டக்காரி’யை அணுகலாம்.

ரேட்டிங் 3/5