‘இசை மேதை’ மற்றும் ‘பாரத ரத்னா’ எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் புதிய திரைப்படம் ‘M.S. : A LEGACY ON SCREEN’. தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார்.
கீதா ஆர்ட்ஸ், ராக்லைன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பென்னி வாசு பிலிம்ஸ் சார்பில் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பென்னி வாசு ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கில் இப்படத்தின் பாரம்பரியமான தொடக்க விழா நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடித்து படத்தைத் தொடங்கி வைத்தார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்ப வாரிசுகள், நலம் விரும்பிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் பிரபலமான பாடல்களை இசைக் கலைஞர்கள் இசைத்து அவருக்கு இசையஞ்சலியும் செலுத்தினர்.
இயக்குநர் கௌதம் தின்னனூரி பேசுகையில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வெறும் இசை சாதனைகளால் மட்டுமே நிறைந்ததல்ல என்றும், பல்வேறு தடைகளையும் எதிர்ப்புகளையும் கடந்து அவர் உலகளவில் தென்னிந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் என்றும் குறிப்பிட்டார். அவரது அர்ப்பணிப்பு, பக்தி, மனிதநேயம் மற்றும் அடுத்த தலைமுறைக்கான செய்திகளை திரையில் நேர்த்தியாக பதிவு செய்ய தங்கள் குழு முழு மரியாதையுடனும் அன்புடனும் பணியாற்றும் என்றார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்குவது பலரது நீண்ட நாள் கனவு என்றும், அவரது வாழ்க்கையில் இருந்த தடைகளையும் அவற்றைக் கடந்து அவர் சாதித்த விதத்தையும் கௌதம் தின்னனூரியின் திரைக்கதை அழகாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். இப்படத்தில் இயக்குநர், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் தனித்துவமான சவால் இருப்பதாகவும் கூறினார்.
தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்ததாக தெரிவித்தார். பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தப் படைப்பு உருவாகி வருவதாகவும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இப்படத்திற்கு முக்கியமானதாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை இசை உலகின் மிகப்பெரிய பொக்கிஷம் என்றும், அந்த வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவது முக்கியமான நிகழ்வு என்றும் தெரிவித்தார். ‘மீரா’ உள்ளிட்ட அவரது படைப்புகளை ஆய்வு செய்து, அவரது நடை, உடை மற்றும் உடல்மொழி ஆகியவற்றை படக்குழுவினர் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அனிருத்தின் இசை இப்படத்திற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் சமுத்திரக்கனி, எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்த நாளில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவிய திரைப்படத்தின் தொடக்க விழா நடைபெறுவது பெருமை அளிப்பதாகக் கூறினார். இயக்குநர் கௌதம் தின்னனூரி மேற்கொண்ட ஆய்வுகளையும், அவர் பகிர்ந்துகொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை சம்பவங்களையும் பாராட்டிய அவர், இப்படம் முக்கியமான வரலாற்றுப் பதிவாக அமையும் என்றார்.
நடிகர் சிவகுமார், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படத்தை தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் உருவாக்குவது மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகக் கூறினார். சிறுவயதிலிருந்தே எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைப் பற்றி அறிந்திருப்பதாகவும், அவரது இசை சாதனைகளை நினைவுகூர்ந்தும் பேசினார்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் இடம்பெற்ற பல்வேறு முக்கியமான சம்பவங்களே இந்தப் படத்தை உருவாக்குவதற்கான உந்துதலாக அமைந்ததாக தெரிவித்தார். அவரது ஒழுக்கம், நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் இசை மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை இப்படம் பதிவு செய்யும் என்றார்.
மேலும், இளம் தலைமுறையினரையும் முந்தைய தலைமுறையின் இசையையும் இணைக்கும் பாலமாக அனிருத் இருப்பதால், இப்படத்திற்கு அவர் இசையமைப்பது சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறினார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசையை யாராலும் மீண்டும் உருவாக்க முடியாது; அவரது இசையின் மாண்பை மதித்து புதிய தலைமுறையிடம் கொண்டு செல்வதே இப்படத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
நடிகை ராஷ்மிகா மந்தானா, எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளில் இந்த நிகழ்வில் பங்கேற்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் அளிப்பதாக தெரிவித்தார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியாக தன்னை தேர்வு செய்திருப்பது பெருமை என்றும், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் ஆசீர்வாதத்துடன் தனது சிறந்த பங்களிப்பை இப்படத்திற்கு வழங்குவேன் என்றும் உறுதியளித்தார்.
நடிகர் கமல்ஹாசன், எம்.எஸ். சுப்புலட்சுமி தென்னிந்தியாவின் மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய இசை ஆளுமைகளில் ஒருவர் என்று குறிப்பிட்டார். பல மொழிகளில் அவரது உன்னதமான உச்சரிப்பும், இசையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பும் இன்றைய தலைமுறைக்கும் பாடமாக இருப்பதாக தெரிவித்தார்.
எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் மற்றும் எம்.எல். வசந்தகுமாரி ஆகிய மூவரையும் சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை நினைவுகூர்ந்த கமல்ஹாசன், அவர்களது ஆசீர்வாதம் தனக்கு கிடைத்திருப்பது பெருமை என்றும் கூறினார்.
மேலும், எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தானாவுக்கு இது மிகப்பெரிய சவாலான கதாபாத்திரம் என்றாலும், அவருக்கு படக்குழுவினர் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்று தெரிவித்தார். இசை மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது என்றும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலுக்கும் அதே சிறப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையின் இசை வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய மியூசிக் அகாடமியில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றிருப்பது மிகவும் பொருத்தமானது என்றும், எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுவது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் முயற்சிகளின் அடிப்படையில் உருவாகும் ‘M.S. : A LEGACY ON SCREEN’, எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை சாதனைகளுடன் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, போராட்டங்கள், அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயத்தையும் திரையில் பதிவு செய்யும் படைப்பாக உருவாகி வருகிறது.



