என்ன விலை – திரைப்பட விமர்சனம்

“எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு” என்ற வாழ்க்கையின் எதார்த்தத்திற்கு நடுவே, பணத்தால் வாங்க முடியாத சில விஷயங்களும் இருக்கின்றன என்பதை அழுத்தமாகப் பேசுகிறது ‘என்ன விலை’ திரைப்படம்.

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கருணாஸ். இறந்தவர்களுக்கு திதி கொடுக்க வருபவர்கள் கடலில் வீசிச் செல்லும் சில்லறைப் பணத்தை சேகரித்து தனது வாழ்க்கையை நகர்த்துகிறார். வறுமை சூழ்ந்த இந்த மனிதருக்கு எதிர்பாராத விதமாக விலை உயர்ந்த தங்க ஆபரணம் ஒன்று கிடைக்கிறது.

அதை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளாமல் நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறார். ஆனால், அங்கு அவரது நேர்மைக்கே சோதனை உருவாகிறது. அதன் பிறகு கருணாஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதிலிருந்து உருவாகும் சட்டம் மற்றும் அறம் சார்ந்த கேள்விகளுமே படத்தின் முக்கிய கதைக்களமாக மாறுகின்றன.

கருணாஸ் இந்தப் படத்தில் தனது நடிப்பின் மற்றொரு முகத்தை காட்டியிருக்கிறார். வசனங்களை விட அவரது முகபாவனைகளே பல இடங்களில் கதையை பேசுகின்றன. வறுமை, பயம், இயலாமை, நேர்மை என கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வரும் நிமிஷா சஜயன் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறார். அவருடைய கதாபாத்திரமும் நடிப்பும் திரைக்கதைக்கு நல்ல வலு சேர்க்கின்றன. விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

அதிரடி மற்றும் த்ரில்லர் படங்களுக்கு தனித்துவமான இசையைக் கொடுக்கும் சாம் சி.எஸ், இந்தப் படத்தில் மென்மையான உணர்வுகளை முன்னிலைப்படுத்தும் பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். காட்சிகளின் உணர்ச்சியை அதிகப்படுத்துவதில் அவரது இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆர்.பி. ஆண்டனியின் ஒளிப்பதிவு ராமேஸ்வரத்தின் இயற்கைச் சூழலையும், கதையின் எளிமையையும் அழகாகப் பதிவு செய்கிறது.

இயக்குநர் சஜீவ் பழூர், பொழுதுபோக்கு அம்சத்தோடு சமூகத்தையும் சிந்திக்க வைக்கும் ஒரு கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். குறிப்பாக நேர்மை, அறம், சட்டம், வறுமை போன்ற விஷயங்களை ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை வழியாக பேசுவது படத்தின் சிறப்பு.

சில இடங்களில் திரைக்கதையின் வேகம் சற்று குறைந்தாலும், சொல்ல வந்த கருத்து படத்தின் முடிவிலும் நம்முடன் பயணிக்கிறது.

மொத்தத்தில், ‘என்ன விலை’ பொழுதுபோக்குடன் மட்டும் நின்றுவிடாமல், மனிதர்களின் மனசாட்சியையும் கேள்வி கேட்கும் ஒரு சமூகப் பார்வையுள்ள படம்.

ரேட்டிங் 3.5/5