“ஒரே மாதிரியான படங்களே வருகின்றன; இது வித்தியாசமான அனுபவத்தை தரும்” – நடிகை ரித்விகா

நாட்டார் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. ‘D3’ படத்தை இயக்கிய பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பிக் பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். லாவர்தன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

கொலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள துப்பறியும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இயற்கை எழில் மற்றும் சவாலான இடங்களில் நடைபெற்றுள்ளது.

செப்டம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசுகையில், க்ரைம் த்ரில்லர் படத்திற்கு இசையமைப்பது தனக்கு இதுவே முதல் முறை என்றும், இயக்குநர் பாலாஜி கூறிய கதை மற்றும் ஒன்லைன் தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் தெரிவித்தார். படத்தின் ஒளிப்பதிவு, நடிப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், படம் ரசிகர்களுக்கு நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றும் கூறினார்.

ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே பேசுகையில், இயக்குநர் பாலாஜியுடன் ஏற்கெனவே ‘D3’ படத்தில் பணியாற்றியதாகவும், இது இருவரும் இணையும் இரண்டாவது படம் என்றும் தெரிவித்தார். வழக்கமான படப்பிடிப்பு இடங்களை விட காடு, மலை உள்ளிட்ட சவாலான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியதாகவும், வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்குக் கூட படப்பிடிப்பு உபகரணங்களை எடுத்துச் சென்று காட்சிகளை படமாக்கியதாகவும் கூறினார்.

படத்தில் நடித்துள்ள தர்ஷிகா, ‘தி டார்க் ஹெவன்’ தனது முதல் திரைப்படம் என்றும், த்ரில்லர் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார். படத்திற்காக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளதாகவும், செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகை ரித்விகா பேசுகையில், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீட்டுத் தேதி மாறிக்கொண்டே இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 18-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். “போலீஸ், முகமூடி மனிதர், இன்வெஸ்டிகேஷன் என ஒரே மாதிரியான கதைக்களங்களில் பல த்ரில்லர் படங்கள் வருகின்றன. ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ அவற்றிலிருந்து வித்தியாசமாக இருக்கும்” என்றார்.

மேலும், படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்ததாகவும், சவாலான இடங்களில் ஒரு காட்சிக்காகவே பல மணி நேரம் காத்திருந்து படமாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். இப்படம் ரசிகர்களுக்கு திருப்திகரமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் பாலாஜி பேசுகையில், ஏற்கெனவே பெருமளவு படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில் சில காரணங்களால் படத்தை மீண்டும் தொடங்கி முடிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக தெரிவித்தார். அந்த இக்கட்டான சூழலில் சரண், கோபால் மற்றும் தனது படக்குழுவினர் வழங்கிய ஆதரவை அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

மேலும், படத்தின் புதிய பயணத்தில் தன்னை நம்பி நடித்த சித்து மீது தனக்கு மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டதாகவும், கடந்த கால விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல் படத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தியதாகவும் இயக்குநர் குறிப்பிட்டார்.

படத்திற்காக ஒட்டுமொத்த குழுவினரும் தூக்கமின்றி கடுமையாக உழைத்ததாகவும், காடு, மலை உள்ளிட்ட சவாலான பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறிய அவர், ஒளிப்பதிவாளர் மணிகண்டன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டினார். ரித்விகா ஏற்றுள்ள கதாபாத்திரம் படத்திற்குப் பிறகு பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இது நாட்டார் கதையை மையமாகக் கொண்ட த்ரில்லர் படம். செப்டம்பர் 18-ம் தேதி வெளியாகும் இப்படம் நல்லதொரு திரையரங்கு அனுபவத்தை வழங்கும். ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது நேர்மையான விமர்சனங்களைத் தெரிவிக்கலாம். நல்லதை கேட்டுக்கொள்கிறோம்; கேட்டதை மாற்றிக்கொள்கிறோம்” என்று இயக்குநர் பாலாஜி தெரிவித்தார்.

கதை நாயகன் சித்து பேசுகையில், ‘தி டார்க் ஹெவன்’ தனக்கு முதல் முழுமையான கதாநாயகன் படம் என்றும், முதல் படத்திலேயே காவல்துறை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இயக்குநர் பாலாஜி தன்னிடம் கதையை கூறியபோது, அதன் த்ரில்லர் அம்சங்கள் மிகவும் பிடித்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்ததாகவும், படத்தின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல், தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும் சித்து கூறினார்.

மேலும், படக்குழுவினர் காடு மற்றும் மலைப்பகுதிகளில் கடுமையாக உழைத்து படப்பிடிப்பை மேற்கொண்டதாகவும், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதில் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

“படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும், கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது. செப்டம்பர் 18-ம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து ‘தி டார்க் ஹெவன்’ படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்று சித்து கேட்டுக்கொண்டார்.

வித்தியாசமான கதைக்களம், நாட்டார் பின்னணி, சஸ்பென்ஸ் மற்றும் க்ரைம் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் செப்டம்பர் 18-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.