“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் ‘இம்மார்டல்’. செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாகியுள்ளது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோருக்கு உயர்தர கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். மேலும், நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக்கையும் பரிசாக வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், “வித்தியாசமான ஜானரில் உருவான ‘இம்மார்டல்’ படத்தின் தொழில்நுட்பத் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பணியாற்றினோம். குறிப்பாக CG பணிகளுக்காக அதிக நேரம் செலவிட்டோம். ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜிவி பிரகாஷ், தமிழகத்தில் படத்தை சிறப்பாக வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி” என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “ஒரு படம் வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும் உற்சாகமும் மிகப்பெரிய எனர்ஜியை தருகிறது. ‘இம்மார்டல்’ படத்திற்கு வெளியான முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் கிடைக்கும் அளவுக்கு படத்தின் வரவேற்பு அதிகரித்தது. ஜிவி பிரகாஷுடன் இதுவரை ஏழு படங்களில் பணியாற்றியுள்ளேன்; அந்த ஏழு படங்களுமே எனக்கு வெற்றிப் படங்கள்தான். ‘இம்மார்டல்’ மூலம் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்பதை நிரூபித்துள்ளார்” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர் ராஜேஷ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜிவி பிரகாஷ், இயக்குநர் மாரியப்பன் சின்னா, இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

நடிகர் கார்த்தி பேசுகையில், “ஐடி துறையை விட்டு சினிமாவுக்கு வந்த எனக்கு, சில நேரங்களில் இந்தத் துறையில் நமக்கான இடம் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படும். ஆனால் ‘இம்மார்டல்’ படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள், நமக்கும் இந்தத் துறையில் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. மீண்டும் இதே படக்குழுவுடன் முற்றிலும் வித்தியாசமான ஜானரில் சிறப்பான ஒரு படத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.

நடிகர் குமார் நடராஜன், இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் தெளிவான கதை மற்றும் உழைப்பை பாராட்டியதுடன், ஜிவி பிரகாஷ், கயாது லோஹர், சாம் சி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். நடிகை மிருதுளாவும் இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசுகையில், “படம் உருவாகும் போதே ‘இம்மார்டல்’ வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு படம் வெற்றி பெற கதை மற்றும் பிரம்மாண்டமான மேக்கிங் மட்டுமல்லாமல், படத்தில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும் நேர்மறையான எனர்ஜியும் முக்கியம். அந்த வகையில் இப்படத்தில் அனைவரும் சிறப்பாக உழைத்துள்ளனர்” என்றார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா, தனது முதல் படமான ‘இம்மார்டல்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், VFX மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், “படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் பணியாற்றினார். படத்தின் வெளியீட்டை சிறப்பாக செய்த சக்தி சாருக்கும், படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் பணிகளில் உழைத்த கோபி பிரசன்னா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.

வித்தியாசமான கதைக்களம், ஃபேண்டஸி மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.