இம்மார்டல் – திரைப்பட விமர்சனம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆதிவாசி தம்பதிக்கு பிறக்கும் குழந்தை மனிதப் பிறவி அல்ல என்பதை அறிந்த தந்தை, அந்தக் குழந்தையை தூக்கி எறிந்துவிடுகிறார். அந்த மர்மக் குழந்தைக்கும் நிகழ்காலத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வியுடன் கதை பயணிக்கிறது.

நிகழ்காலத்தில் அச்சகத்தில் பணிபுரியும் ஜி.வி. பிரகாஷ், அழகிய கயாது லோஹருடன் ரூம் ஷேரிங் செய்யும் சூழல் உருவாகிறது. ஆனால், அவர் நினைத்தது போல அது சாதாரண அறை அல்ல… பிரம்மாண்டமான மாளிகை. அங்கு அவர் எதிர்பார்க்காத வசதிகளும், இன்பங்களும் கிடைக்கின்றன. ஆனால், காலப்போக்கில் கயாது லோஹர் ஒரு அமானுஷ்யப் பெண் என்பதை ஜி.வி. பிரகாஷ் தெரிந்துகொள்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? கயாது லோஹர் யார்? அவரிடம் இருந்து ஜி.வி. பிரகாஷ் தப்பித்தாரா? என்பதே படத்தின் சுவாரஸ்யமான பயணம்.

ஜி.வி. பிரகாஷுக்கு இந்தப் படம் ஒரு நல்ல நடிப்பு வாய்ப்பு. காமெடி, பயம், பதற்றம் என பல்வேறு உணர்வுகளை எளிதாகக் கடத்தி, தனக்கான ஸ்கோரை நன்றாகப் பெற்றிருக்கிறார். ‘பேச்சுலர்’, ‘நாச்சியார்’, ‘சர்வம் தாளமயம்’ போன்ற படங்களில் நடிகராக அவர் காட்டிய திறமையை மீண்டும் இங்கும் ரசிக்க முடிகிறது.

கயாது லோஹர் படத்தின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒருவர். கதாபாத்திரத்துக்குத் தேவையான மர்மத்தையும் வசீகரத்தையும் தனது தோற்றம் மற்றும் நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, அவரை திரையில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் ரசிகர்களை கவரும். மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்திருக்க, கார்த்திக் சீனிவாசன் தனது நடிப்பால் தனி கவனம் பெறுகிறார்.

சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அமானுஷ்யம் நிறைந்த காட்சிகளுக்கு பதற்றத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டுவதில் அவரது இசை முக்கிய பங்கு வகிக்கிறது. காட்சிகளின் தாக்கத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் வகையில் பின்னணி இசை அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் கேமரா பணியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். குறிப்பாக, மாளிகை மற்றும் அமானுஷ்ய சூழலை அழகாகவும் மர்மமாகவும் பதிவு செய்திருப்பதுடன், கயாது லோஹரை திரையில் வசீகரமாகக் காட்டியிருக்கும் விதம் தனி பாராட்டு பெறுகிறது.

படத்தின் முதல் 20 நிமிடங்கள் சற்று குழப்பமாகவும், ‘கதை எங்கே செல்கிறது?’ என்ற கேள்வியை எழுப்பும் வகையிலும் இருக்கிறது. ஆனால், அதன் பிறகு படம் வேகம் எடுக்கிறது. குறிப்பாக 20 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்கும் திருப்பங்களும், மாளிகைக்குள் நடக்கும் சம்பவங்களும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.

ஒரே இடத்திற்குள் பெரும்பாலான காட்சிகளை வைத்துக்கொண்டு, பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படாமல் திரைக்கதையை நகர்த்தியிருப்பது இயக்குநர் மாரியப்பன் சின்னாவின் முக்கிய பலம். குறிப்பாக இரண்டாம் பாதியில் சில சிறிய குறைகள் இருந்தாலும், அவை படத்தின் மொத்த அனுபவத்தை பெரிதாக பாதிக்கவில்லை.

மொத்தத்தில், அமானுஷ்யம், மர்மம், காமெடி, கிளாமர் என தியேட்டரில் ரசிக்கக்கூடிய அம்சங்களை சரியான அளவில் கலந்து கொடுத்திருக்கிறது ‘இம்மார்டல்’. முதல் 20 நிமிடங்களைத் தாண்டி படம் வேகம் பிடித்ததும், அடுத்தடுத்த காட்சிகள் ரசிகர்களை திரையில் வைத்திருக்கின்றன.

ரேட்டிங் : 3.5/5