ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா

AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படத்தின் பிரம்மாண்டமான முன் வெளியீட்டு விழா படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், இயக்குநர் மாரியப்பன் சின்னா கூறிய கதை மற்றும் விஷுவல் கற்பனைகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ஆரம்பத்திலேயே உணர்ந்ததாக தெரிவித்தார். படத்திற்காக நீண்ட கால முன் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளில் படக்குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துள்ளதாகவும் கூறினார். “இம்மார்டல்” வழக்கமான தமிழ் திரைப்படமாக இல்லாமல், ரசிகர்களுக்கு புதிய விஷுவல் அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், “இது இந்திய சினிமாவிற்கு புதிதான வாம்பயர் ஜானரில் உருவாகியுள்ள படம். சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன், சுமார் நான்காயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. சிஜி மற்றும் மான்ஸ்டர் காட்சிகளுக்காக படக்குழுவினர் ஒரு வருடத்திற்கும் மேலாக உழைத்துள்ளனர். இது எந்தப் படத்தின் காப்பியும் அல்ல; ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சி,” என்றார். மேலும், கயாது லோஹர், சாம் சி.எஸ். மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசுகையில், இந்தக் கதையை உருவாக்கியது முதல் படமாக்கியது வரை ஏராளமான சவால்களை எதிர்கொண்டதாக தெரிவித்தார். வழக்கமான திரைப்படம் அல்லாததால் ஒவ்வொரு காட்சியையும் புதிதாக வடிவமைக்க வேண்டியிருந்ததாகவும், தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் முழு சுதந்திரம் மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் கூறினார். தமிழ் தெரியாத நிலையிலும் கயாது லோஹர் வசனங்களை கற்றுக்கொண்டு கடுமையாக உழைத்ததாகவும், ஆக்‌ஷன் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் படமாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் உள்ளிட்டோர் பேசுகையில், “இம்மார்டல்” திரைப்படத்தின் விஷுவல் தரம், தொழில்நுட்பம் மற்றும் படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினர். ஜி.வி. பிரகாஷின் நடிப்பு, குறிப்பாக இரண்டாம் பாதியில் ரசிகர்களை கவரும் என்றும், சாம் சி.எஸ். வழங்கியுள்ள பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். நடிகர்கள் டி.எம். கார்த்தி, குமார் நடராஜன், ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டர் ராஜேஷ் உள்ளிட்டோரும் படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், “டிராகன்” திரைப்படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வாழ்க்கையில் நுழையும் பெண்ணைத் தொடர்ந்து ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஃபேண்டஸி ஜானருடன் சிஜி மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ளது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “இம்மார்டல்” திரைப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.