காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் கவின், தனது காதல் வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையாததால் பெற்றோர் பார்க்கும் திருமணத்தை ஏற்க மறுக்கிறார். இதற்கிடையே, திருமண வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளாமல் தனது கனவுகளை நோக்கிப் பயணிக்க விரும்பும் நயன்தாராவும், எதிர்பாராத திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
சென்னையில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் இருவரும் நண்பர்களாகப் பழகத் தொடங்குகிறார்கள். நயன்தாராவுக்கு காதல், திருமணம் மீது பெரிய நம்பிக்கை இல்லாததை அறிந்த கவின், தனது காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் வைத்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் – மனைவியாக நடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது காதலை நயன்தாராவிடம் கொண்டு சேர்க்க கவின் முயற்சிப்பதும், அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களும்தான் ‘ஹாய்’ படத்தின் கதை.
காதல் கதையை மிகப்பெரிய திருப்பங்களோ, பரபரப்பான சம்பவங்களோ இல்லாமல் இயல்பான உணர்வுகளுடன் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன். கதை எளிமையாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் குணாதிசயங்களையும் அவர்களுக்கு இடையேயான உறவையும் மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பது படத்திற்கு பலம்.
கோவை பின்னணியில் இருந்து வரும் இளைஞராக கவின், கொங்கு தமிழ் பேச்சு மற்றும் உடல்மொழியுடன் கதாபாத்திரத்திற்குள் இயல்பாகப் பொருந்துகிறார். காதலுக்கான ஏக்கம், காதல் கிடைக்காத ஏமாற்றம், அதை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது என பல்வேறு உணர்வுகளை அளவான நடிப்பில் வெளிப்படுத்துகிறார். குறிப்பாக நகைச்சுவை காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
நயன்தாரா, தனக்கென ஒரு சுயமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைக்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். காதல் மற்றும் திருமணம் குறித்து அவருடைய கதாபாத்திரம் கொண்டிருக்கும் பார்வையை தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். திரையில் அவருடைய தோற்றமும், ஆடை வடிவமைப்பும் கதாபாத்திரத்திற்கு தனி அழகை சேர்க்கின்றன. அதே நேரத்தில், கவினுடன் இணைந்து வரும் சில காட்சிகளில் இருவருக்குமான வயது வித்தியாசம் சற்று வெளிப்படுவது படத்தின் பலவீனமாக அமைகிறது.
கவினின் பெற்றோராக வரும் ராதிகா மற்றும் கே.பாக்யராஜ், தங்களது அனுபவமான நடிப்பால் காட்சிகளுக்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார்கள். நயன்தாராவின் தந்தையாக வரும் பிரபுவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் சுஹாசினி மணிரத்னத்தின் பங்களிப்பும் கவனம் பெறுகிறது.
சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் கலகலப்பை அதிகரிக்கின்றன. குறிப்பாக சத்யனின் மைண்ட் வாய்ஸ் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பை ஏற்படுத்தக்கூடியவை. விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை வழங்குகிறது. குறிப்பாக காதல் காட்சிகள் மற்றும் நாயகி இடம்பெறும் காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை காதல் காட்சிகளின் உணர்வை அழுத்தமாக கடத்துகிறது. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு படத்தின் இலகுவான தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தும் திருப்பங்கள் இல்லாத போதிலும், கதாபாத்திரங்களின் உறவு, நகைச்சுவை மற்றும் காதல் உணர்வுகளை வைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன். குறிப்பாக காதலை மையமாகக் கொண்ட படமாக இருந்தாலும், அதை மிகைப்படுத்தாமல் இயல்பான தருணங்களுடன் அணுகியிருப்பது பாராட்டுக்குரியது.
சில இடங்களில் திரைக்கதை இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம். அதேபோல், நாயகன் – நாயகி இணையின் வயது வித்தியாசம் சில காட்சிகளில் கதையின் இயல்பை பாதிக்கிறது. இருப்பினும், கவினின் இயல்பான நடிப்பும், நகைச்சுவை கலந்த காட்சிகளும் அந்த குறைகளை ஓரளவு மறக்கச் செய்கின்றன.
மொத்தத்தில், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்று ரசிக்கக்கூடிய, காதலும் நகைச்சுவையும் கலந்த இதமான படமாக ‘ஹாய்’ அமைந்திருக்கிறது.
ரேட்டிங் 4/5


