‘டாக்ஸிக்’ திரைப்பட விமர்சனம்

பிரமாண்டமான காட்சிகள், அதிரடி ஆக்‌ஷன், நட்சத்திரப் பட்டாளம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘டாக்ஸிக்’, வலுவான திரைக்கதை இல்லாததால் ரசிகர்களை ஏமாற்றும் அனுபவமாக மாறியிருக்கிறது.

1947 முதல் 1970 வரையிலான காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. அப்போது கோவாவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியா குழுக்களுக்கு இடையேயான மோதலில் தொடங்கும் கதை, முரட்டுத்தனமும் துணிச்சலும் நிறைந்த இளைஞனான யாஷை மையமாகக் கொண்டு பயணிக்கிறது.

தனது சகோதரி நயன்தாராவின் கனவை நிறைவேற்றும் நோக்கில் கோவாவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயலும் யாஷ், எதிரிகளை வேட்டையாடுகிறார். ஆனால், எதிர்பாராத சதியில் சகோதரி கொல்லப்பட, கோவாவை விட்டு வெளியேறும் அவர், சீனாவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துகிறார்.

காலம் கடந்து மீண்டும் கோவாவுக்குத் திரும்பும் சூழல் யாஷுக்கு உருவாகிறது. அவரது வருகையால் ஏற்படும் அதிர்ச்சியில் அவரது முதல் மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்து கொள்கிறார். தனது 10 வயது மகனையும் கொல்ல முயற்சிக்கும் யாஷால் அதைச் செய்ய முடியாமல் போக, மகனை அங்கிருந்து விரட்டிவிடுகிறார்.

அதன் பிறகு மீண்டும் கோவாவில் தனது சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்தும் யாஷ், ருக்மணி வசந்தை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்குள் செல்கிறார். ஆனால், அவரது சாம்ராஜ்யத்திற்கும் மகனின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. அந்த ஆபத்திலிருந்து தனது மகனையும் சாம்ராஜ்யத்தையும் யாஷ் காப்பாற்றினாரா? இந்த சதியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிரமாண்டம் மட்டும் போதுமா?

‘கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு யாஷ் நடிக்கும் படத்தின் மீது இயல்பாகவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பிரமாண்டமான செட், அதிகப்படியான ஆக்‌ஷன் மற்றும் வன்முறைக் காட்சிகள் மூலம் மட்டுமே பூர்த்தி செய்யலாம் என்ற அணுகுமுறை ‘டாக்ஸிக்’ படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

ஒரு திரைப்படத்திற்கு பிரமாண்டமான காட்சியமைப்புகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வலுவான கதை மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் திரைக்கதையும் அவசியம். அந்த அடிப்படை விஷயத்தில் படம் தடுமாறுவதால், திரையில் தெரியும் பிரமாண்டம் கூட ஒரு கட்டத்தில் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.

ராயா மற்றும் டிக்கெட் என்ற அப்பா–மகன் கதாபாத்திரங்களில் யாஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். கம்பீரமான தோற்றம், ஸ்டைலிஷான உடைகள், மாஸ் எண்ட்ரி, துப்பாக்கி, வாள் என கதாபாத்திரத்தை மாஸாக உருவாக்குவதில் எந்தக் குறையும் இல்லை.

ஆனால், கதாபாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களிலும் ஆக்‌ஷன் காட்சிகளே ஆதிக்கம் செலுத்துவதால், நடிகராக யாஷின் திறமை முழுமையாக வெளிப்படவில்லை. கோபம், வன்முறை, எதிரிகளை வீழ்த்துவது என ஒரே பாணியில் கதாபாத்திரம் நகர்வதால், ஒரு கட்டத்தில் அவரது நடிப்பைவிட அவர் பயன்படுத்தும் ஆயுதங்கள்தான் அதிக கவனத்தை ஈர்க்கின்றன.

கிளைமாக்ஸை நோக்கி சில காட்சிகளில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சி செய்திருந்தாலும், அங்கும் ஆக்‌ஷன் காட்சிகள் குறுக்கிடுவதால் அந்த முயற்சி முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

யாஷின் சகோதரியாக நடித்திருக்கும் நயன்தாரா, ஆரம்பக் காட்சிகளில் அதிரடியான அறிமுகத்துடன் கவனம் ஈர்க்கிறார். அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பும் உருவாகிறது.

ஆனால், கதை நகர நகர அவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் குறைந்து, பல காட்சிகளில் அமைதியாக நிற்கும் கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுகிறார். இவ்வளவு பெரிய நடிகையை பயன்படுத்திய விதம் ஏமாற்றம் அளிக்கிறது.

கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா, ஹுமா குரேஷி என படத்தில் பல முன்னணி நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

ஆனால், அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் நடிப்பைக் காட்டிலும் அவர்களது ஆடை அலங்காரமும் காட்சியமைப்பும் அதிக கவனம் பெறுகின்றன. கதையின் ஓட்டத்தில் இவர்களது கதாபாத்திரங்கள் ஏற்படுத்த வேண்டிய தாக்கம் போதுமானதாக இல்லை.

ஒளிப்பதிவு – படத்தின் மிகப்பெரிய பலம்

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு ‘டாக்ஸிக்’ படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. 1947 முதல் 1970 வரையிலான காலகட்டத்தை திரையில் கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள், உடைகள், செட் அமைப்புகள் என ஒவ்வொரு காட்சியும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கிராபிக்ஸ் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கப்பட்ட காட்சிகளுடன் இணைத்திருப்பதும் பாராட்டுக்குரியது. திரையில் தெரியும் ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு பெரிய அளவிலான தயாரிப்பை உணர்த்துகிறது.

இசை – பின்னணி இசை மட்டும் கைகொடுக்கிறது

ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை. அதே நேரத்தில், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பின்னணி இசை தேவையான வலிமையை கொடுக்கிறது.

ஆனால், படம் முழுவதும் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால், அதற்கேற்ற வகையில் பயன்படுத்தப்பட்ட பின்னணி இசை சில இடங்களில் அளவுக்கு அதிகமான சத்தமாக மாறி காதுகளைச் சோர்வடையச் செய்கிறது.

பல கதாபாத்திரங்கள், ஏராளமான கிளைக்கதைகள் என படம் விரிவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றை தெளிவாக இணைத்து சொல்லாததே படத்தின் மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

குறிப்பாக முதல் பாதியில் கதை எந்த திசையில் செல்கிறது, யார் யாருடன் தொடர்புடையவர்கள், உண்மையான பிரச்சனை என்ன என்பது குறித்து பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

இரண்டாம் பாதியில் கதையின் மையம் ஓரளவுக்கு தெளிவாகும்போது, “இவ்வளவு குழப்பத்திற்கு இதுதானா காரணம்?” என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ், கதையை ஹாலிவுட் பாணியில் பிரமாண்டமாக காட்சிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். ஆனால், அந்த முயற்சியில் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் தேவையான முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறை காட்சிகள் அதிகம். துப்பாக்கிச் சண்டை, ஆயுதங்கள், கொலைகள் என ஆக்‌ஷன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனுடன் பெண்களை மையப்படுத்திய கிளாமர் மற்றும் ஆபாசத் தன்மை கொண்ட காட்சிகளும் அதிகமாக இடம்பெறுகின்றன.

வன்முறை என்பது படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பிரச்சனை அல்ல. ஆனால், அதுவே படத்தின் பிரதான அம்சமாக மாறும்போது, கதையின் உணர்வும் சுவாரஸ்யமும் காணாமல் போய்விடுகிறது.

‘டாக்ஸிக்’ படத்தில் பாராட்ட வேண்டிய விஷயங்கள் இல்லாமல் இல்லை. யாஷின் ஸ்டைலிஷான தோற்றம், பிரமாண்டமான காட்சியமைப்புகள், காலகட்டத்தை பிரதிபலிக்கும் தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளின் உருவாக்கம் என தொழில்நுட்ப ரீதியாக படம் பல இடங்களில் உயர்ந்து நிற்கிறது.

பார்வையாளர்களை கதைக்குள் அழைத்துச் செல்லும் வலுவான திரைக்கதை, மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள் மற்றும் சுவாரஸ்யமான கதை சொல்லல் இல்லாதபோது, எவ்வளவு பெரிய பிரமாண்டமாக இருந்தாலும் அது நீண்ட நேரம் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை ‘டாக்ஸிக்’ உணர்த்துகிறது.

மொத்தத்தில், விஷுவல் பிரமாண்டமும் மாஸ் ஆக்‌ஷனும் நிறைந்திருந்தாலும், பலவீனமான திரைக்கதை காரணமாக பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியிருக்கிறது ‘டாக்ஸிக்’. பெயரைப் போலவே… ரசிகர்களுக்கு நச்சுத்தன்மையான அனுபவமாக மாறுகிறது இந்த ‘டாக்ஸிக்’.