“திரைப்படம் முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நம்முடன் நீண்ட காலம் பயணிக்கும்”…‘இருமுடி கட்டு’ திரைப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர்

சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

சில கதாபாத்திரங்கள் ஒரு நடிகரிடம் எதை எதிர்பார்க்கின்றன என்பதனால் மட்டுமல்லாமல், அவை தங்களுடன் கொண்டுவரும் உலகத்தினாலும் சிறப்பானதாக மாறுகின்றன. பிரியா பவானி சங்கரைப் பொறுத்தவரை, ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அத்தகைய மறக்க முடியாத பயணமாக அமைந்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது.

அன்பான மனைவியாகவும், பாசமுள்ள தாயாகவும் காவேரி என்ற கதாபாத்திரத்தில் ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். குடும்பம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட இப்படத்தின் கதைக்களத்தில், காவேரி மற்றும் ரவி தேஜா கதாபாத்திரத்திற்கும் இடையேயான அன்பும் நெருக்கமும் படத்தின் கதாபாத்திர அறிமுகம் மற்றும் புரமோஷன் காட்சிகள் மூலம் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதே நேரத்தில், படத்தின் கதைக்களம் தந்தை மற்றும் மகளுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான உறவு, நம்பிக்கை மற்றும் மனமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.

’இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியா பவானி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “காவேரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான கதாபாத்திரம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, சிவா நிர்வாணா உருவாக்கியிருந்த உணர்வுப்பூர்வமான உலகத்தைப் புரிந்துகொண்டேன். இப்படிப்பட்ட நேர்மையான மற்றும் வலிமையான கதையில் நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உறவுகளில் நிறைய அன்பும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் இருக்கின்றன. அதனால் காவேரி கதாபாத்திரம் எனக்கும் ஸ்பெஷல்”

”ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவம். எல்லோருடனும் அன்பாகவும் இயல்பாகவும் பழகினார். அதனால் எங்களுக்கும் நடிப்பது எளிதாகவும் மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள் குறித்து சிவா மிகவும் தெளிவாக இருந்தார். அவரது வழிகாட்டுதலுடன் பணியாற்றியது அழகான அனுபவம்”.

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “படப்பிடிப்பு முடிந்தபோது, இந்த திரைப்படத்தைத் தாண்டியும் நாங்கள் எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். ஏராளமான காட்சிகளில் நடித்தோம், ஆயிரக்கணக்கான நினைவுகளை உருவாக்கினோம், எங்களுக்குள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய பல நகைச்சுவையான தருணங்களைப் பகிர்ந்துகொண்டோம், நிறைய சிரித்தோம். நாம் பணியாற்றும் மனிதர்கள், நம்முடன் எடுத்துச் செல்லும் நினைவுகளின் முக்கியமான பகுதியாக மாறிவிடும் பயணங்களில் இதுவும் ஒன்று. 

இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், குறிப்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி சார், ஒய். ரவி சங்கர் சார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான மற்றும் பக்தி சார்ந்த உலகத்துடன் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இணைந்திருக்கும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தத் திரைப்படத்தையும், அதன் கதாபாத்திரங்களையும், நாங்கள் இதில் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளையும் ரசிகர்கள் தங்களுடன் இணைத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்றார். 

சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் புடி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாஹி சுரேஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், நரேஷ் பாபு பி. திரைக்கதை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் சார்பில் குல்ஷன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்குகின்றனர். சிவ் சனானா இணைத் தயாரிப்பாளராகவும், நீரஜ் கல்யாண் டி-சீரிஸின் தலைவராகவும், செர்ரி தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுகின்றனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்து, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம், மாஸ் மகாராஜா ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் இயக்குநர் சிவா நிர்வாணா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.