தெலுங்கு பட உலகில் போதை பொருட்கள் புழக்கம் கணிசமாக இருப்பதாக புகார்கள் வந்தன. நடிகர்-நடிகைகள் பலருக்கு போதை பழக்கம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சிகரெட், ஊசி, சுவாசித்தல் போன்றவற்றின் மூலமாக ‘கொக்கைன்’ உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின் என்ற போதை பொருள் கடத்தல்காரரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர்-நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நடிகர்கள் நவ்தீப், தருண், தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு, கலை இயக்குனர் சின்னா உள்பட திரைப்படத்துறையைச் சேர்ந்த 12 பெயர்கள் இருப்பதாக தெலுங்கு டெலிவிஷன் சேனல்கள் படத்துடன் செய்தி வெளியிட்டன. இந்த 12 பேருக்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதைதொடர்ந்து இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு நடிகர்-நடிகைகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று தெலுங்கு நடிகர் தருண் விசாரணை குழு முன் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே போல் நேற்று நடிகர் சுப்பாராஜிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து டைரக்டர் பூரி ஜெகன்னாத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு இருவரிடமும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.