“சின்ன படங்கள் தான் ஆச்சரியப்படுத்தும்!” – ‘மொத ராத்திரி’ டிரெய்லர் வெளியீட்டு விழா

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

புதுமுக இயக்குநர் ராஜா கருப்பசாமியின் கதையின் மீது நம்பிக்கை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்தார்.

விழாவில் பேசிய பல்வேறு இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர், ரிஷிகாந்தின் நடிப்பு, ராஜா கருப்பசாமியின் இயக்கம் மற்றும் படத்தின் வித்தியாசமான கதைக்களம் குறித்து பாராட்டுகளைத் தெரிவித்தனர். இயக்குநர் பாரி, “பெரிய படங்கள் உற்சாகப்படுத்தும்; சின்ன படங்கள் ஆச்சரியப்படுத்தும்” எனக் கூறி இப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்றார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி, தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவான கதைதான் ‘மொத ராத்திரி’ என்றும், தனக்கு வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என்றும் தெரிவித்தார்.

கதாநாயகன் ரிஷிகாந்த் பேசுகையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் கதை முதலில் குறும்படமாக உருவானதாகவும், அதன் பின்னர் ஆறு ஆண்டுகள் பயணித்து இப்படத்தை உருவாக்கியதாகவும் கூறினார். தன் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், குடும்பமாக ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் ரசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பரத் சங்கர் இசையமைப்பில், சுரேஷ் பரஞ்சோதி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ ஆகஸ்ட் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.